முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார்:டீக்கடை உரிமையாளரிடம் ரூ.7 ஆயிரம் பாக்கியை வழங்கிய கரியாலூர் போலீசார்


முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார்:டீக்கடை உரிமையாளரிடம் ரூ.7 ஆயிரம் பாக்கியை வழங்கிய கரியாலூர் போலீசார்
x
தினத்தந்தி 20 Aug 2023 12:15 AM IST (Updated: 20 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

டீக்கடை உரிமையாளரிடம் ரூ.7 ஆயிரம் பாக்கியை கரியாலூர் போலீசார் வழங்கினா்.

கள்ளக்குறிச்சி


கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள கரியாலூர் போலீஸ் நிலையத்தில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் என்று மொத்தம் 10 போலீசார் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் போலீஸ் நிலையம் எதிரே உள்ள செல்வம் என்பவரது டீக்கடையில் டீ குடிப்பது வழக்கம். இதற்கு உரிய பணத்தை செலுத்தாமல் இருந்துள்ளனர். இதனால் கடன் நாளுக்கு நாள் அதிகரித்து 7 ஆயிரம் ரூபாய் வரைக்கும் சென்றுவிட்டது. இது தொடர்பாக டீக்கடை கடன் பிரச்சினை, முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு புகாராக சென்றது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் நிலையில் உள்ள அதிகாரி இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார். டீக்கடை கடன் விவகாரம் தொடர்பாக நேற்று 'தினத்தந்தி' யில் செய்தி வெளியானது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவின் பேரில் உடனடியாக நேற்று காலை அந்த டீக்கடைக்கு கொடுக்க வேண்டிய கடன் தொகை செலுத்தப்பட்டது. போலீஸ் நிலைய தலைமை காவலர் ஆனந்த் என்பவர் கடையின் உரிமையாளரான செல்வத்தின் மனைவி அன்புகரசியிடம் ரூ.7 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது, இனி டீக்கு உரிய பணத்தை அன்றைய தினமே பெற்றுக்கொள்ளுமாறு கடை உரிமையாளரிடம் போலீஸ்காரர் அறிவுறுத்தினார். இதனிடையே டீக்கடை பாக்கியை செலுத்தியதை புகைப்படம் எடுத்து, அதை போலீசார் தங்களது வாட்ஸ்-அப் குரூப்பில் வெளியிட்டு இருந்தனர். அதில் டீ பாக்கி கடைக்காரரிடம் செலுத்தப்பட்டு விட்டது என்று கூறியிருந்தனர்.


Next Story