கிணத்துக்கடவு அருகே மீன் பிடிக்க சென்ற போது ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி
கிணத்துக்கடவு அருகே மீன் பிடிக்க சென்ற போது ஆற்றில் மூழ்கி தொழிலாளி பாிதாபமாக இறந்தார்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே உள்ள எஸ். மேட்டுப்பாளையம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வி (51). குடும்ப தகராறு காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து தனியாக அதே பகுதியில் வசித்து வந்தார். முருகன் கோவில்பாளையம், சேரன் நகர் பகுதியிலுள்ள ஆற்றில் மீன்பிடிக்க செல்வதற்காக சொக்கலிங்கம் என்பவருடன் சென்றார். ஏற்கனவே முருகன் மீன் வலையை தண்ணீரில் வீசியிருந்தார். அந்த வலையை எடுப்பதற்காக ஆற்றில் இறங்கினார். சொக்கலிங்கம் ஆற்றின் கரையில் உட்கார்ந்திருந்தார். தண்ணீரில் இறங்கி மீன் வலையை எடுக்க முயன்றபோது முருகன் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று உள்ளார். இதனால் அவர் தண்ணீரில் மூழ்க உயிருக்கு போராடினார். அதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் மற்றும் சொக்கலிங்கம் தண்ணீரில் மூழ்கிய முருகனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முருகனின் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.