ஆதிவாசி மக்களுக்கு வழங்கிய நிலத்தை மீட்டு தர வேண்டும்


ஆதிவாசி மக்களுக்கு வழங்கிய நிலத்தை மீட்டு தர வேண்டும்
x
தினத்தந்தி 28 March 2023 12:15 AM IST (Updated: 28 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆதிவாசி மக்களுக்கு வழங்கிய நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

ஆதிவாசி மக்களுக்கு வழங்கிய நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

குறைதீர்ப்பு கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு அமைப்பினர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் பெற்றுக் கொண்டார். முன்னதாக மனு கொடுக்க வந்த பொதுமக்களின் உடைமைகளை சோதனை செய்த பிறகே போலீசார் உள்ளே செல்ல அனுமதித்தனர்.

முகாமில் கோவை தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சியினர் அளித்த மனுவில், கனரக வாகனங்களில் அங்கீகரிக்கப்பட்ட அளவில் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? உரிய அனு மதியுடன் கொண்டு செல்லப்படுகிறதா? என்று கண்காணிக்க வேண்டும். கோவையில் இருந்து கனிம வளங்கள் பிற பகுதிகளுக்கு கடத்தப்படுவதை தடுக்க வேண்டும். இல்லை என்றால் கோவை பாலைவனமாக மாறி விடும் என்று கூறப்பட்டு உள்ளது.

செம்மொழி பூங்கா

அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பினர் அளித்த மனுவில், கோவையில் அமைய உள்ள செம்மொழி பூங்காவில் தமிழ் மொழி செம்மொழி என்று அறிவித்த கிறிஸ்தவ மிஷனரி ராபர்ட் கால்டுவெல்டுக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

கோவையை அடுத்த மேட்டுப்பாளையம் வெள்ளியங்காடு ஆதிவாசி கிராம சபைகளின் கூட்டமைப்பினர் அளித்த மனுவில், ஆதிவாசி மக்க ளுக்கு வழங்கிய நிலத்தை அரசு அதிகாரிகளின் துணையுடன் பிற பெயர்களில் பதிவு செய்து மோசடி செய்து உள்ளனர்.

அந்த நிலத்தை உடனடியாக மீட்டு தர வேண்டும். ஆதிவாசிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பவர்களை கண்டறிந்து எங்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும்.

நிலமோசடி தொடர்பாக மேல்மட்ட விசாரணைக்குழு அமைக்க வேண்டும். ேமலும் ஆதிவாசி மக்களுக்கு குடிநீர், நடைபாதை, மயான வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

வட்டி கேட்டு மிரட்டல்

சிங்காநல்லூரை சேர்ந்த பார்வதி அளித்த மனுவில், மனநலம் பாதிக்கப்பட்ட தம்பி மகனை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

ஆட்டோ டிரைவர் மீனாட்சி சுந்தரம் அளித்த மனுவில், நான் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். தனியார் நிதி நிறுவனத்தில் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சத்து 66 ஆயிரம் கடன் வாங்கினேன்.

அதற்கு இதுவரை ரூ.2 லட்சத்து 64 ஆயிரம் வட்டி உடன் சேர்த்து கட்டி உள்ளேன். ஆனால்இன்னும் அசலும் வட்டியும் செலுத்த வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

பாதாள சாக்கடை திட்டம்

கோவை நல்லாம்பாளையத்தை சேர்ந்த ராஜசிங்கம் என்பவர் கண்களை கருப்புத்துணியால் கட்டிக் கொண்டு வந்து அளித்த மனுவில், கோவை மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டத்தில் எத்தனை வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதற்கு எவ்வளவு தொகை செலவழிக்கப்பட்டு உள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டேன்.

ஆனால் இதுவரை எந்த பதிலும் வர வில்லை. அதை கண்டிக்கும் விதமாக தலையில் ஒரு புறம் முடியை எடுத்து விட்டு கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு மனு அளித்தேன் என்றார்.


Next Story