4 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


4 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

நெல்லை மாவட்டத்தில் 4 வாலிபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்

திருநெல்வேலி

நெல்லை:

மாவட்டத்தில் 4 வாலிபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா வழக்கு

நெல்லை மாவட்டம் நாங்குநேரி மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சிவசுப்பு என்ற சிவா (வயது 23). கொக்கிரகுளத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் மகன் முத்துவேல் என்ற வேல்முருகன் (21).

இவர்கள் 2 பேரும் சட்டவிரோதமாக கஞ்சா விற்றதாக நெல்லை தாலுகா போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கொள்ளை வழக்கு

அதேபோல் மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த தளவாய் மகன் இளங்கோ (20), பேய்குளத்தை சேர்ந்த சுந்தரம் மகன் செங்கான் (21) ஆகியோர் மானூர் அருகே உள்ள பலஸ்தீனாபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரை தாக்கி அவரிடம் மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்து சென்றனர். படுகாயமடைந்த பாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து முன்னீர்பள்ளம் போலீசார் இளங்கோ மற்றும் செங்கான் ஆகியோர் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குப்பதிவு செய்து கைது செய்து 2 பேரையும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டம்

இவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைத்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு, சிவசுப்பு என்ற சிவா, முத்துவேல் என்ற வேல்முருகன் மற்றும் இளங்கோ, செங்கான் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அதற்கான ஆணையை அந்தந்த இன்ஸ்பெக்டர்கள் கோவை மாவட்ட மத்திய சிறை மற்றும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினர்.


Next Story