அண்ணாமலை விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்-அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி


அண்ணாமலை விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்-அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அண்ணாமலை விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

அண்ணாமலை விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பேட்டி

பா.ஜனதா ஓ.பி.சி. அணி பிரிவு மாநில செயலாளர் சிவபாலன் நேற்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் நாகர்கோவிலில் வைத்து தி.மு.க.வில் இணைந்தார்.

பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் பா.ஜனதா இந்துக்களை வாக்கு வங்கிகளாக பயன்படுத்தி வருகிறது. தி.மு.க. சமூகநீதி, மதச்சார்பின்மை போன்ற எல்லோருக்குமான கொள்கையை வகுத்து தெளிவான பாதையில் அழைத்து செல்கிறது. இதனால் பா.ஜனதாவில் இருந்து பலர் தி.மு.க.வில் இணைந்து வருகிறார்கள்.

தமிழகத்திற்கு பாரபட்சம்

நம்மிடமிருந்து ஜி.எஸ்.டி.யாக ரூ.9 வசூலித்து விட்டு அதில் ரூ.1.50 மட்டுமே திருப்பி அளிக்கிறது. ஜி.எஸ்.டி. வருவாயில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. ஆனால் உத்தரப்பிரதேசம், மத்தியபிரதேசம் போன்ற பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அதிக நிதி ஒதுக்கிவிட்டு, தமிழகத்திற்கு குறைவான நிதியை ஒதுக்கி பாரபட்சம் காட்டுகிறார்கள்.

மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. அதே சமயம் சாமானிய மக்கள் கடன், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை வசூலிப்பதில் கடுமை காட்டுகிறது. தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பா.ஜ.க. அரசியல் செய்கிறது.

சட்டம் தன் கடமையை செய்யும்

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுப்பதை விட்டு விட்டு, மக்களிடையே பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். விடுதலை சிறுத்தைகள் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி வட மாநில தொழிலாளர்கள் குறித்து பதிவிட்ட கருத்துக்கள் பற்றி நீங்கள் கேட்கிறீர்கள்.

ஒரு அரசியல் கட்சியின் கருத்து உரிமையில் தலையிட முடியாது. ஆனால் பா.ஜனதா சாதி, மதம் மற்றும் மாநில ரீதியாக பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிடுவதை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாது. அண்ணாமலை விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story