10 ஆண்டுகளாக சிக்காமல் இருந்த ரவுடி கும்பல் தலைவன் கைது
10 ஆண்டுகளாக சிக்காமல் இருந்த ரவுடி கும்பல் தலைவன் கைது
கோவை
10 ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்தவரும், கோவையில் நடந்த கொலை வழக்கில் முக்கிய தொடர்புடைய ரவுடி கும்பல் தலைவனை போலீசார் கைது செய்தனர். அவர் தப்பி ஓட முயன்றபோது கீழே விழுந்து கால்கள் முறிந்தன.
ரவுடி கொலை
மதுரையை சேர்ந்தவர் சத்தியபாண்டி. இவர் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் மனைவியுடன் வசித்து வந்தார். இவர் மீது கோவை, மதுரை ஆகிய பகுதிகளில் பல்வேறு வழக்குகள் உள்ளன. பிரபல ரவுடியான இவர், கடந்த பிப்ரவரி மாதம் ஆவாரம்பாளையம் பகுதியில் அரிவாளால் வெட்டப்பட்டும், துப்பாக்கியால் சுடப்பட்டும் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த கொலை தொடர்பாக சஞ்செய் ராஜா, காஜா உசேன், ஆல்வின், சபூல்கான் மற்றும் சஞ்செய் குமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
முக்கிய நபர் தலைமறைவு
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொலையில் கோவையை சேர்ந்த தில்ஜித் (வயது 44) என்பவர்தான் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான தில்ஜித்தை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.
அவர் டெல்லி, இந்தூர், மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பல பகுதிகளில் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் தில்ஜித் கோவை சாய்பாபாகாலனி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்த தனிப்படை போலீசார் தில்ஜித் பதுங்கி இருந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.
கைது செய்தனர்
இதை அறிந்து கொண்ட அவர் வீட்டில் இருந்து ஒரு பையை முதுகில் போட்டுக்கொண்டு தப்பி ஓடினார். இதையடுத்து போலீசார் அவரை துரத்திச்சென்று சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அப்போது அவர் கீழே விழுந்ததால் கால்கள் முறிந்ததால் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பையில் இருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.