விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தா்ணா
பெரியகுளம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சி பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி 2 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இந்த சம்பவத்தை கண்டித்தும், வீடுகளை இடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் விடுதலை சிறுத்தைகள், தமிழ் புலிகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னர் தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற தொகுதி அமைப்பாளர் தமிழ்வாணன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஆண்டி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு கீதா, தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் நசீர் சுல்தான், உதவி பொறியாளர் அனுசியா ஆகியோரும் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.