நூலக கட்டிடம் இடிந்து விழும் அபாயம்
கலவையில் நூலக கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் அதனை சீரமைக்கவோ அல்லது புதிய கட்டிடமோ கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நூலகம்
கலவை பேரூராட்சி 4-வது வார்டில் நூலக கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடமாகும். இந்த நூலகத்தில் 2 ஆயிரத்து 800 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தினமும் 50-க்கும் மேற்பட்டோர் நூலகத்திற்கு வந்து படித்து செல்கின்றனர்.
இந்த நூலகம் சரியான முறையில் பராமரிக்கப்படாததால் நூலகத்தின் உள்ளே மேல் பகுதியில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து பல இடங்களில் கம்பிகள் வெளியே தெரிகிறது. மழைக்காலங்களில் கட்டிடத்தில் பல இடங்களில் ஒழுகி இந்நூலகத்தில் உள்ள புத்தகங்கள்நனைந்து வருகின்றன. நூலக வளாகத்தில் புதர்கள் உள்ளதால் விஷ பூச்சிகள் நடமாட்டமும் உள்ளது. இதுகுறித்து இங்கு ஊழியர்களும் வாசகர்களும் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வாசகர் ஒருவர் புத்தகம் எடுக்கும் போது திடீரென மேல் பகுதி பெயர்ந்து விழும் சத்தம் கேட்கவே அவர் அதிர்ச்சியுடன் வெளியே ஓடி வந்தார்.
எனவே பெரிய அளவில் விபரீதம் நிகழும் முன்னர் நூலகத்தை தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்றி இதனை இடித்து விட்டு தரமான முறையில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் அல்லது புதிய இடத்தில் நூலக கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
பூங்காவுடன்...
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில் நூலகத்துக்கு அருகிலேயே நெடுஞ்சாலை துைறக்கு சொந்தமான இடத்தை ஒருவர் ஆக்கிரமித்து கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். அதனைஅகற்றிவிட்டு நூலகத்தை விரிவாக்கம் செய்து பூங்காவுடன் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.