வேலூர் மாநகராட்சியில் வரி செலுத்தாதவர்களின் பெயர்பட்டியல் வெளியிடப்படும்
வேலூர் மாநகராட்சியில் ரூ.50 கோடி வரி, வாடகை நிலுவையில் உள்ளதால் அவற்றை செலுத்தாதவர்களின் பட்டியலை வெளியிட்டு நிலுவையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாநகராட்சியில் ரூ.50 கோடி வரி, வாடகை நிலுவையில் உள்ளதால் அவற்றை செலுத்தாதவர்களின் பட்டியலை வெளியிட்டு நிலுவையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாடகை பாக்கி
வேலூர் மாநகராட்சி வளர்ந்து வரும் மாநகராட்சியாக திகழ்கிறது. இந்த மாநகராட்சிக்கு சொந்தமாக ஏராளமான வணிக வளாகங்கள், வாகன நிறுத்துமிடங்கள் உள்ளது. அவற்றுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. அவர்கள் அதற்கான வாடகையை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும்.
மாநகராட்சி சார்பில் வாடகை தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பல மாதங்களாக ஏராளமான வாடகைதாரர்கள், வாடகை செலுத்தாமல் ஏமாற்றி வருகின்றனர். சுமார் ரூ.15 கோடி வரை வாடகை பாக்கி நிலுவையில் உள்ளது.
அதன்படி முதல்கட்டமாக அதிக வாடகை பாக்கி செலுத்த வேண்டியவர்களில் முதல் இடத்தில் உள்ள 100 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களிடம் வாடகை வசூலிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காலக்கெடுவுக்கு பின்னரும் வாடகை கட்டாமல் இருப்பவர்களின் கடைகள் மூடி 'சீல்' வைக்கப்பட்டு வருகிறது. விரைவில் புதிய ஏலம் விடுவதற்கும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
வசூலிக்க நடவடிக்கை
இதுதவிர, மாநகராட்சியில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வீட்டுவரி, சொத்து வரி, பாதாள சாக்கடை வரி உள்ளிட்ட வரி இனங்களை செலுத்தாமல் உள்ளனர். இதன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.35 கோடி நிலுவையில் உள்ளது. இந்த வரிகளை வசூலிக்க ஒவ்வொரு வார்டு வாரியாக வீடுகளுக்கே மாநராட்சி ஊழியர்கள் சென்று வரிவசூல் செய்ய உள்ளனர்.
மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை மற்றும் வரிகளை உடனடியாக செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாதவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் பெயர்கள் வெளியிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.