தறித்தொழிலாளி அடித்துக்கொலை
சங்ககிரி:-
சங்ககிரி அருகே தறித்தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கணவன்- மனைவி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தறித்தொழிலாளி
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கஸ்தூரிபட்டி பாலமலையான் காடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 55). தறித்தொழிலாளி. இவரது மனைவி திருமணமான சில ஆண்டுகளிலேயே பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மாரிமுத்து தனது தாய் குப்பாயியுடன் வசித்து வந்தார். கஸ்தூரிபட்டியை சேர்ந்த சண்முகம் வீட்டுக்கு சென்று அவருடைய மனைவி கவிதாவிடம், மாரிமுத்து தவறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த சண்முகம், மாரிமுத்து இனிமேல் தன்னுடைய வீட்டுக்கு வரக்கூடாது என குப்பாயியிடம் கூறியுள்ளார். அப்படி இருந்தும் மாரிமுத்து நேற்று அதிகாலை 5 மணி அளவில் சண்முகம் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனை கவிதா, சண்முகத்திடம் கூறியுள்ளார். உடனே மாரிமுத்து அங்கிருந்து மொபட்டில் புறப்பட்டு சென்றார்.
அடித்துக்கொலை
இதுபற்றி சண்முகம், தனது தம்பி பூபதி மற்றும் உறவினர்கள் குமார், ராஜமாணிக்கம் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். இதனை அறிந்த மாரிமுத்து மொபட்டில் அங்கிருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்றார். அதற்குள் சண்முகம், கவிதா, பூபதி, குமார், ராஜமாணிக்கம் ஆகிய 5 பேரும் மாரிமுத்துவை துரத்தி சென்று கஸ்தூரிபட்டியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே வழிமறித்தனர். பின்னர் 5 பேரும் சேர்ந்து கட்டை மற்றும் கைகளால் மாரிமுத்துவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். இதையடுத்து 5 பேரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். அக்கம் பக்கத்தினர் மாரிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்ைச அளித்தும் பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்து மாரிமுத்துவின் அண்ணன் மகன் மோகன்ராஜ் என்பவர் சங்ககிரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தேவி கொலை வழக்குப்பதிவு செய்து சண்முகம், கவிதா, பூபதி, குமார், ராஜமாணிக்கம் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இதற்கிடையே கொலை நடந்த இடத்துக்கு சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். தறித்தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.