தண்டவாளத்தில் குறுக்கே லாரி பழுதாகி நின்றது, நீலகிரி எக்ஸ்பிரசை முன்னதாகவே நிறுத்தியதால் விபத்தில் இருந்து தப்பியது


தண்டவாளத்தில் குறுக்கே லாரி பழுதாகி நின்றது, நீலகிரி எக்ஸ்பிரசை முன்னதாகவே நிறுத்தியதால் விபத்தில் இருந்து தப்பியது
x

தண்டவாளத்தில் குறுக்கே லாரி பழுதாகி நின்றது, நீலகிரி எக்ஸ்பிரசை முன்னதாகவே நிறுத்தியதால் விபத்தில் இருந்து தப்பியது.

கோயம்புத்தூர்

துடியலூர்

கோவை-மேட்டுப்பாளையம் இடையே ரெயில் தண்டவாளங்களை மாற்றும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன. தற்போது தண்டவாளங்கள் மாற்றப்பட்டு, சுமார் 1 அடி வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்படி சாலையில் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தண்டவாளங்களும் உயர்த்தப்பட்டு உள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 8.45 மணிக்கு மதுபானங்களை ஏற்றி வந்த லாரி ஒன்று துடியலூர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றது.

அப்போது திடீரென லாரியின் ஆக்சில் கட்டாகி தண்டவாளத்தின் குறுக்கே நின்றது. நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் வரும் நேரம் என்பதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் லாரியில் 30 டன் அளவிற்கு மதுபானங்கள் இருந்ததால் லாாியை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த கேட் கீப்பர் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அதிகாரிகள் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஓட்டுனர்களுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் கேட் கீப்பர் சிவப்பு விளக்குடன் ரெயில்வே தண்டவாளத்தில் காத்திருந்தார். இதன் காரணமாக நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் 50 மீட்டருக்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கிரேன் வரவழைக்கப்பட்டு இரும்பு ரோப் மூலம் கட்டி லாரியை இழுத்தனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தண்டவாளத்தில் பழுதாகி நின்ற லாரியை அகற்றினர். இதையடுத்து கேட் அடைக்கப்பட்டு, அங்கு காத்திருந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. தண்டவாளத்தில் லாரி சிக்கியதும், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு தகவல் கொடுத்து முன்னதாகவே நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொடர் விபத்துகள் நடந்து வருவதால் தண்டவாளத்தின் உயரத்துக்கு ஏற்ப சாலையின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story