என்ஜினில் தீப்பற்றி லாரி எரிந்தது: உரிமையாளருக்கு ரூ.7¼ லட்சம் வழங்க காப்பீடு நிறுவனத்திற்கு உத்தரவு


என்ஜினில் தீப்பற்றி லாரி எரிந்தது: உரிமையாளருக்கு ரூ.7¼ லட்சம் வழங்க காப்பீடு நிறுவனத்திற்கு உத்தரவு
x

என்ஜினில் தீப்பற்றி லாரி எரிந்தது தொடர்பாக உரிமையாளருக்கு ரூ.7¼ லட்சம் வழங்க காப்பீடு நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெரம்பலூர்

லாரி தீப்பற்றி எரிந்தது

சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா, கிழக்கு ராஜபாளையத்தில் உள்ள கிழக்கு தெருவை சேர்ந்தவர் சம்பத்(வயது 47). இவர் டிப்பர் லாரி வைத்து வாடகைக்கு இயக்கி வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 2-ந்தேதி சம்பத்தின் டிப்பர் லாரி பெரம்பலூர் மாவட்டம், வேப்பூரில் இருந்து சுண்ணாம்புக்கல் ஏற்றிக்கொண்டு அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூருக்கு சென்று கொண்டிருந்தது. அரியலூர் புறவழிச்சாலையில் ராவுத்தன்பட்டி அருகே சென்றபோது திடீரென்று லாரியின் என்ஜின் தீப்பற்றியதையடுத்து லாரி எரிந்து நாசமானது. இது தொடர்பாக சம்பத் கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அவர் தீப்பற்றி எரிந்த லாரிக்கு விபத்து காப்பீடு தொகை ரூ.6 லட்சத்து 87 ஆயிரத்து 927-ம், சேவை குறைபாடாக ரூ.10 ஆயிரமும் கேட்டு லாரிக்கு காப்பீடு செய்திருந்த பெரம்பலூரில் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள தி நியூ இந்தியா இன்சூரன்ஸ் அஷ்யூரன்ஸ் கோ லிமிடெட் கிளை அலுவலகத்தை நாடினார்.

வழக்கு

ஆனால் அந்த காப்பீடு நிறுவனமோ அதிக பாரம் ஏற்றிச்சென்றதால் தான் லாரி தீப்பற்றி எரிந்திருக்கும் என்று கூறி, அவருக்கு காப்பீடு தொகையை வழங்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சம்பத் இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ந்தேதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிமன்ற தலைவர் ஜவஹர் மற்றும் நீதிமன்ற உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் விசாரித்தனர்.

காப்பீடு தொகை வழங்க உத்தரவு

வழக்கை விசாரித்த நீதிபதி, டிப்பர் லாரி அதிக பாரம் ஏற்றி சென்றதற்கான ஆதாரங்களையும், ஆவணங்களையும் காப்பீடு நிறுவனம் சமர்ப்பிக்காததால், லாரியின் உரிமையாளர் சம்பத்துக்கு காப்பீடு நிறுவனம் விபத்து காப்பீடு தொகையாக ரூ.6 லட்சத்து 87 ஆயிரத்து 927-ம் மற்றும் சேவை குறைபாடு, மன உளைச்சலுக்காக ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.7 லட்சத்து 37 ஆயிரத்து 927-ஐ 45 நாட்களுக்குள் வழங்க உத்தரவிட்டார். குறிப்பிட்ட நாட்களுக்குள் தொகையை வழங்காவிட்டால் ஜூன் மாதம் முதல் 9 சதவீதம் வட்டி கணக்கிட்டு அந்த தொகையை வழங்க வேண்டும் என்று காப்பீடு நிறுவனத்தின் கிளை அலுவலகத்திற்கு உத்தரவிட்டார்.


Next Story