மாயமான தொழிலாளி அடித்து கொலை
மாயமான தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
திருச்சி உறையூர் பனிக்கன் தெருவை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் சீனிவாசன்(வயது 25). தொழிலாளியான இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு பூச்சிக்கொல்லி மருந்து கம்பெனியில் லோடு இறக்க சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து உறையூர் போலீஸ் நிலையத்தில் மோகன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த மாயமான சீனிவாசனை தேடி வந்தனர். ஆனால் அவரை பற்றிய விவரம் தெரியாத நிலையில், தனது மகனை கண்டுபிடித்து தரக்கோரி கடந்த டிசம்பர் மாதம் மதுரை ஐகோர்ட்டில் உள்ள இலவச சட்ட ஆலோசனை மையத்தில் மனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சீனிவாசனை தேடி வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உக்கடை அரியமங்கலத்தை சேர்ந்த அப்துல் கபூர் பஷீர் (29) என்பவர் உறையூர் கிராம நிர்வாக அலுவலரிடம் நேற்று சரணடைந்தார்.
இதையடுத்து அவரை போலீசாரிடம் கிராம நிர்வாக அலுவலர் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீனிவாசனும், அப்துல் கபூர் பஷீரும் மது அருந்திவிட்டு காந்தி மார்க்கெட் பால்பண்ணை மேம்பாலத்தில் சென்றபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அப்துல் கபூர் பஷீர், சீனிவாசனின் தலையை பிடித்து பாலக்கட்டை தடுப்பு சுவற்றில் இடித்துவிட்டு அவர் தப்பியோடியதும், இதில் சீனிவாசன் இறந்துவிட்டதும், தெரியவந்துள்ளது. மேலும் தன்னை போலீசார் தேடிவருவதை அறிந்து கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்ததாக அப்துல் கபூர் பஷீர் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.