மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும்


மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 12 May 2023 1:15 AM IST (Updated: 12 May 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை அருகே அட்டகாசம் செய்யும் மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் என்று சப்-கலெக்டரிடம், விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

ஆனைமலை அருகே அட்டகாசம் செய்யும் மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் என்று சப்-கலெக்டரிடம், விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

மக்னா யானை

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் பிரியங்காவிடம், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தினர் நேற்று ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆனைமலை தாலுகா சரளபதி கிராமத்தில் கடந்த 25 நாட்களாக மக்னா யானை நடமாட்டம் உள்ளது. தினமும் விளை நிலங்களையும், பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. மேலும் காளியம்மன் கோவில் பகுதிகளில் யானை அடிக்கடி வந்து செல்கிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. யானை எந்த பகுதியில் இருந்து வருகிறது என்பதை தெரிந்து கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அச்சப்படுகின்றனர்.

விவசாயிகளுக்கு இழப்பீடு

யானை வரும் பகுதியில் 3 கும்கி யானையை வனத்துறையினர் நிறுத்தி உள்ளனர். ஆனால் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கு எந்த ஒரு முயற்சியும் நடைபெறவில்லை. இதனால் யானை தொடர்ந்து விளை நிலங்களை சேதப்படுத்தி கொண்டு வருகிறது. எனவே மக்களின் அச்சத்தை போக்குவதற்கும், விளை நிலங்களை சேதப்படுத்தாமல் இருக்கவும் அரசு அவசர கால நடவடிக்கையாக மக்னா யானையை பிடித்து வேறு வனப்பகுதியில் கொண்டு சென்று விட வேண்டும். மேலும் விளை நிலங்களை யானை சேதப்படுத்தியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மதுபான பாருக்கு எதிர்ப்பு

த.மா.கா.வினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பொள்ளாச்சி காந்தி சிலைக்கு அருகில் தனியார் மதுபான பார் வருவதாக அறிகிறோம். எனவே அந்த மதுபான பாருக்கு அனுமதி வழங்க கூடாது. மேலும் பொள்ளாச்சி பஸ் நிலையத்திற்கு அருகில் பெருமாள் செட்டி வீதியில் அரசு மதுக்கடை வருவதாக தெரிகிறது. இதனால் பொதுமக்கள், கடை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மேலும் மதுக்கடை அமைந்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட கூடும். கடந்த ஆட்சியில் அந்த வீதியில் இருந்த மதுக்கடைகள் பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக மூடப்பட்டது. எனவே அந்த வீதியில் மீண்டும் மதுக்கடை வருவற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story