மலபார் 'விசிலிங் திரஸ்' பறவைகளின் உள்ளூர் வலசை தொடங்கியது


மலபார் விசிலிங் திரஸ் பறவைகளின் உள்ளூர் வலசை தொடங்கியது
x
தினத்தந்தி 28 Nov 2022 12:15 AM IST (Updated: 28 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் மலபார் ‘விசிலிங் திரஸ்’ பறவைகளின் உள்ளூர் வலசை தொடங்கியுள்ளது.

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் மலபார் 'விசிலிங் திரஸ்' பறவைகளின் உள்ளூர் வலசை தொடங்கியுள்ளது.

மலபார் 'விசிலிங் திரஸ்'

நீலகிரி மாவட்டத்தில் குளிர்காலம் மற்றும் பனி தொடங்கும் நேரத்தில் பறவைகளின் உள்ளூர் வலசை எப்போதும் ஆரம்பிக்கும். அந்த வகையில் தற்போது நவம்பர் மாத பனிப்பொழிவு தொடங்கி இருப்பதால், பறவைகளின் உள்ளூர் வலசை தொடங்கியுள்ளது.

இதன்படி சமவெளி பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கும், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வெப்பம், குளிர் காரணமாக பறவைகள் இடம் பெயர்கின்றன.

அதில் தற்போது மலபார் விசிலிங் திரஸ் பறவை அதிகளவில் உள்ளூர் இடம் பெயர்வை(வலசை) தொடங்கி உள்ளது. மலபார் விசிலிங் திரஸ் பறவை மனிதர்களை போல விசில் அடிக்கும் தன்மை கொண்டது. இதனால் விசில் அடிக்கும் பறவை என்று பொதுமக்கள் அன்புடன் அழைக்கிறார்கள்.

ஆற்றங்கரை காடுகள்

இந்த இனம் மேற்கு தொடர்ச்சி மலை, மத்திய இந்தியா மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் சில பகுதிகளிலும் அதிகளவில் காணப்படுகிறது. அடர்ந்த ஆற்றங்கரை காடுகளிலும், இருண்ட மரத்தின் அடிகளிலும் பொதுவாக பாறை நீரோடைகள் மற்றும் காடுகள் உள்ள ஆறுகளின் விளிம்புகளில் வாழ்கின்றன. கடல் மட்டத்திலிருந்து 220 மீட்டர் உயரத்தில் உள்ள மலையடிவாரத்தில் வாழும் தன்மை கொண்டது. நீலகிரி மாவட்டத்தில் தொட்டபெட்டா, கோடநாடு, பர்லியார் ஆகிய பகுதியில் இந்த பறவை அதிகமாக காணப்படுகிறது.

இது குறித்து பறவை ஆர்வலர்கள் கூறுகையில், இந்த பறவை கருநீல நிற கழுத்து, நீல நிற இறகுகள், தலைமேல் வீ போன்ற வடிவை கொண்டு மிக அழகாக காணப்படும். காலை நேரங்களில் விசில் அடிப்பது போன்று குரல் எழுப்புவது இனிமையாக இருக்கும். இந்த விசிலின் சத்தத்தை கேட்பதற்காகவே ஏராளமான பறவை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த பறவையை காண செல்கின்றார்கள் என்றனர்.


Next Story