தொழிலாளியை அரிவாளால் வெட்டியவர் கைது

வால்பாறையில் தொழிலாளியை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
வால்பாறை,
வால்பாறை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 38). இவர் அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான மகேந்திரன் (50) என்பவரை, தனது வீட்டில் மண் எடுக்கும் பணிக்காகவும், மரக்கிளைகளை வெட்டி அகற்றுவதற்காகவும் அழைத்து சென்று உள்ளார். வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த போது, அருகே உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றுவதில் முத்துக்குமாருக்கும், மகேந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மகேந்திரன், முத்துக்குமாரை தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து மகேந்திரனை தலை மற்றும் கையில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த மகேந்திரன் கீழே சரிந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் வால்பாறை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் மகேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்தநிலையில் மகேந்திரனை அரிவாளால் வெட்டிய முத்துக்குமார் கையில் அரிவாளுடன் வந்து வால்பாறை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துக்குமாரை கைது செய்தனர்.