காரில் பெண்ணை கடத்தியவர் கைது
காரில் பெண்ணை கடத்தியவர் கைது
தஞ்சையில் காரில் பெண்ணை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
விவாகரத்து பெற்று பெண்
தஞ்சை விளார் பகுதியை சேர்ந்த விவாகரத்து பெற்ற 28 வயது பெண் ஒருவர், மறுமணம் செய்து கொள்வதற்காக திருமண தகவல் மையத்தில் இணையதளம் மூலம் பதிவு செய்து இருந்தார். அதே திருமண தகவல் மையத்தில் கும்பகோணம் அருகே நரசிங்கம்பேட்டையை சேர்ந்த ஆண் ஒருவரும் பதிவு செய்து இருந்தார்.
அப்போது மறுமணம் செய்து கொள்வதற்காக பதிவு செய்த பெண்ணின் முகவரி கிடைத்தது. மேலும் அதில் இருந்த செல்போனில் பேசிய நபர், திருமணம் சம்பந்தமாக பேச வேண்டும் எனவும், தஞ்சையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
கடத்தி செல்வதாக கதறல்
அதன்படி நேற்றுமுன்தினம் காலையில் ஓட்டலுக்கு அந்த பெண் சென்றார். அப்போது அங்கே 2 பேர் இருந்துள்ளனர். இவர்கள் பிற்பகல் வரை அந்த ஓட்டல் அறையில் தங்கியுள்ளனர். அந்த பெண்ணுக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து தவறாக நடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர் அந்த பெண்ணை காரில் ஏற்றி கொண்டு வெண்ணாற்றங்கரை அருகே சென்றபோது தன்னை கடத்தி செல்வதாக கூறி கதறி அழுதார். உடனே பொதுமக்கள் அந்த காரை மடக்கினர். உடனே காரில் இருந்தவர்கள் தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மீட்பு; கைது
அவர்கள் விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நரசிங்கம்பேட்டையை சேர்ந்த சந்தோஷ்குமாரை நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். கடத்தப்பட்ட பெண்ணிற்கு 7 மற்றும் 5 வயதில் 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.