மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது


மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது
x

மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது: 2½ ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர். இவர் 2½ ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தார்.

படிக்கும் போது நெருக்கம்

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 22). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்தபோது சக மாணவி ஒருவரிடம் நெருங்கி பழகி உள்ளார். அந்த சமயத்தில் மாணவியிடம் திடீரென காதலை அபிஷேக் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் மாணவி அவருடைய காதலை ஏற்கவில்லை. எனினும் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

மயக்க மருந்து கலந்து பலாத்காரம்

இந்தநிலையில் மாணவியிடம் நைசாக பேசிய அபிஷேக், அவரை நண்பரின் வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து மாணவியிடம் அபிஷேக் கொடுத்துள்ளார். இதனை குடித்த சற்று நேரத்தில் மாணவி மயங்கியதாக தெரிகிறது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அபிஷேக் மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். அந்த காட்சியை அவர் வீடியோவாகவும் எடுத்துள்ளார். மயக்கம் தெளிந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகளை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் இந்த விவகாரத்தை வெளியே சொன்னால், நாம் இருவரும் சேர்ந்து இருக்கும் ஆபாச வீடியோவை சமூகவலைத்தளத்தில் பரப்பி விடுவேன் என அபிஷேக், மாணவியை மிரட்டியுள்ளார்.

மாணவிக்கு தொடர்ந்து மிரட்டல்

இதனால் மாணவி பயந்து விட்டார். இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் அவமானம் என நினைத்த அவர் வீட்டில் உள்ளவர்களிடம் நடந்த விஷயத்தை தெரிவிக்கவில்லை. இதற்கிடையே கல்லூரி படிப்பும் முடிந்தது. ஆனால் அதன் பிறகும் அபிஷேக்கின் மிரட்டல் தொடர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் மாணவி தனக்கு நடந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.

போலீசில் புகார்

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அபிஷேக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2020-ம் ஆண்டு நடந்தது.

இதற்கிடையே படிப்பை முடித்த அபிஷேக் துபாய் நாட்டிற்கு வேலைக்கு செல்ல தயாராக இருந்துள்ளார். மாணவி புகார் கொடுத்ததை அறிந்ததும் அவர் துபாய் நாட்டுக்கு சென்று தலைமறைவானார்.

தலைமறைவானவர் கைது

அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். மேலும் இந்த விவகாரம் தெரிந்த பிறகு அபிஷேக்கை, அவருடைய தந்தை வில்சன்குமார் வெளிநாட்டுக்கு அனுப்பியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் மீதும், அபிஷேக்கின் செயலுக்கு உடந்தையாக இருந்த நண்பர் அனீஸ் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் 2½ ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் அபிஷேக் துபாயில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அதிரடியாக அபிஷேக்கை கைது செய்தனர்.


Next Story