வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது
திருவண்ணாமலையில் வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை பே கோபுரத் தெருவை சேர்ந்தவர் பிரேம் (வயது 28). இவர் நேற்று அவரது நண்பருடன் மதுபோதையில் அருணாசலேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள தேரடி வீதியில் நடந்து சென்றார்.
அந்த வழியாக கடலாடி புத்தேரி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (35) என்பவர் போதையில் எதிரில் வந்தார்.
அப்போது பிரேமிற்கும், வெங்கடேசனுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பிரேம் அங்கிருந்த பழக்கடையில் இருந்த கத்தியை எடுத்து வெங்கடேசனை குத்த முயன்றதாக தெரிகிறது.
அதனை தடுத்து வெங்கடேசன் அவரிடம் இருந்து கத்தியை பிடித்து பிரேமை குத்தினார்.
இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த பிரேம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.