2 மோட்டார் சைக்கிள்களை திருடியவர் கைது
கீழ்வேளூர் பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்களை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்களை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள் காணவில்லை
கீழ்வேளூர் வடக்கு மட விளாகத்தை சேர்ந்தவர் ரத்தீஷ்குமார் (வயது 35). இவர் கடந்த 27-ந் தேதி இரவு தனது வீட்டுவாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
இதுகுறித்து ரத்தீஷ்குமார் கீழ்வேளூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
வாகன சோதனை
இந்த நிலையில் நேற்று காலை கீழ்வேளூர்-ஒர்குடி சாலையில் உள்ள ஓடம்போக்கி ஆறு பகுதியில் கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணபவகுமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளில் நிறுத்தி அதில் வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் கீழ்வேளூர் வடக்கு வெளிபகுதியை சேர்ந்த கவியரசு (36) என்பதும், இவர் ரத்தீஷ்குமாரின் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது.
கைது
மேலும் கடந்த ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி கீழ்வேளூர் அருகே செருநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்த நாகேஸ்வரன் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரிய வந்தது.
இதைதொடர்ந்து போலீசார், கவியரசுவை கைது செய்து அவரிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களையும் மீட்டனர்.