போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
ராமநாதபுரத்தில் போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் பஜார் காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருபவர் கலிங்கன். இவர் இன்ஸ்பெக்டரின் டிரைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் ரோந்து சென்றபோது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் குடிபோதையில் அந்த வழியாக செல்வோரை தரக்குறைவாக பேசி தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதனை போலீஸ்காரர் கலிங்கன் கண்டித்தபோது அவரை அவதூறாக பேசி சட்டையை பிடித்து இழுத்து அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கலிங்கன் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து ராமநாதபுரம் முகவை ஊருணி மேல்கரையை சேர்ந்த முனியசாமி மகன் செந்தில்குமார் (வயது33) என்பவரை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வருகிற 28-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.