பெண்ணை காரை ஏற்றி கொல்ல முயன்றவர் கைது
கொள்ளிடம் அருகே பெண்ணை காரை ஏற்றி கொல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே உள்ள பூங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது40). இவர் தற்போது சீர்காழியில் வசித்து வருகிறார். பூங்குடி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு புராண நாடகம் நடைபெற்றது.அப்போது அங்கு வந்த சந்திரமோகன் ஏன் எனக்கு தெரியாமல் நாடகம் நடத்துகிறீர்கள் என்று கேட்டு விழா குழுவினரை திட்டி மின்விளக்குளை உடைத்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மனைவி சாந்தி (45) என்பவர் பூங்குடி கிராமத்துக்கு வந்து நாடகம் பார்த்துவிட்டு திரும்பி வீட்டுக்கு பூங்குடி சாலையில் நடந்து சென்றபோது, சந்திரமோகன் தனது காரை அந்த பெண் மீது மோதினார்.. இதில் சாந்தியின் வலது காலில் காயம் ஏற்பட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டகணேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரமோகனை கைது செய்தனர்.