டயர் தொழிற்சாலை நிர்வாகம் விளக்கம் அளிக்க உத்தரவு


டயர் தொழிற்சாலை நிர்வாகம் விளக்கம் அளிக்க உத்தரவு
x

டயர் தொழிற்சாலை நிர்வாகம் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் கிராம ஊராட்சியில் இயங்கி வரும் எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் காற்று மற்றும் நீர் மாசுபாடு காரணமாக ஆஸ்துமா, புற்றுநோய் மற்றும் பிற நோய் தொற்று ஏற்படுவதாக தெரிவித்து, அந்த தொழிற்சாலையின் அருகே உள்ள கிராம மக்கள் அளித்துள்ள புகார் மனு தொடர்பாக ஆலத்தூா் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. தாசில்தார் முத்துக்குமார் தலைமை தாங்கினார். பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். இதில் சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலவலர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் சார்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜலீல் நசுருதீன், தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் காரை சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலையின் சார்பில் மூத்த மேலாளர் கன்னியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் தரப்பில், ஆலையால் ஏற்படும் பாதிப்புகளை தெரிவித்தனர். ஆலை நிர்வாகம் சார்பாக பேசுகையில், காற்று மற்றும் நீர் மாசுபாட்டினை தடுப்பது குறித்தும், மேலும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் நிவாரணம் வழங்குவது தொடர்பாக தங்களது நிர்வாகத்திடம் விசாரித்து 2 வார காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிப்பதாக தெரிவித்தனர். மேலும் தொழிற்சாலையில் நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் கருத்துருக்கள் ஏதும் இல்லை என்றும், டயர் தயாரிப்பதற்கு மட்டும் நிலக்கரி பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் ஆலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து, ஆலை நிர்வாகம் சார்பில் காற்று மற்றும் நீர் மாசுபாட்டினை தடுப்பதும் தொடர்பாகவும், மேலும் ஆஸ்துமா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சையில் இருந்து வரும் பொதுமக்களுக்கும், இறந்த நபர்களுக்கும் நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை நிர்வாகம் வருகிற 17-ந்தேதிக்குள் விரிவான அறிக்கையை ஆலத்தூர் தாசில்தாரிடம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பினர் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணியிடம் நேற்று மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story