ஆற்றில் மூழ்கி கொத்தனார் பலி
விக்கிரவாண்டி அருகே ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கிய மகனை காப்பாற்றிய கொத்தனார் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
விக்கிரவாண்டி
கொத்தனார்
விக்கிரவாண்டி அடுத்த வாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன்(வயது 50). கொத்தனாரான இவர் நேற்று மாலை கயத்தூரில் கட்டுமான வேலை முடிந்ததும் தனது மகன் விக்கி(12) என்பவனுடன் அங்குள்ள வராக ஆற்றில் தேங்கி நின்ற தண்ணீரில் குளித்துக்கொண்டிருந்தார்.
அப்போது விக்கி ஆழமான பகுதிக்கு சென்று குளித்ததால் நீரில் மூழ்கி உயிருக்கு போராடினான். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வீரப்பன் உடனே விரைந்து சென்று நீரில் மூழ்கிய தனது மகனை காப்பாற்றி கரையில் தூக்கி வீசினார்.
நீரில் மூழ்கி பலி
ஆனால் துரதிருஷ்ட வசமாக சேற்றில் சிக்கிக்கொண்ட வீரப்பன் நீரில் மூழ்கினார். தனது கண்எதிரே தந்தை தண்ணீரில் மூழ்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விக்கி கூச்சலிட்டான்.
இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரில் மூழ்கிய வீரப்பனை பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவரது உடலை பார்த்து விக்கி கதறி அழுதான்.
போலீசார் விசாரணை
இது பற்றி தகவல் அறிந்து வந்த விக்கிரவாண்டி போலீசார் வீரப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்ணீரில் மூழ்கிய மகனை காப்பாற்றிய தந்தை சேற்றில் சிக்கி பலியான சம்பவம் வாக்கூர் கிராமமக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.