மாசி மக தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


மாசி மக தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 1 March 2023 12:15 AM IST (Updated: 1 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசி மக தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கோயம்புத்தூர்

காரமடை,

காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசி மக தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கொடியேற்றம்

கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டிற்கான மாசி மக தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அரங்கநாதர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் கொடி கோவில் உள்பிரகாரம் வலம் வந்தது.

சிறப்பு பூஜை செய்யப்பட்டு, காலை 11.10 மணிக்கு கோவில் கொடிமரத்தில் அர்ச்சகர்கள் கொடியேற்றினர். நிகழ்ச்சியில் அரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ., காரமடை தாசப்பளஞ்சிக மகாஜன சங்க தலைவர் கே.பி.வி.கோவிந்தன், மருதூர் ஊராட்சி மன்ற தலைவர் பூர்ணிமா ரங்கராஜன் மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு 8.30 மணிக்கு அன்னவாகன உற்சவம் நடைபெற்றது.

கருட சேவை

இன்று (புதன்கிழமை) முதல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரை தினமும் இரவு 8.30 மணிக்கு சிம்ம வாகன உற்சவம், அனுமந்த வாகன உற்சவம், நாளை மறுநாள் கருட சேவை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 4-ந் தேதி காலை 10.45 மணிக்கு பெட்டத்தம்மன் சுவாமி அழைப்பு புறப்பாடு நடக்கிறது.

5-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் அரங்கநாதர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 8.30 மணிக்கு யானை வாகன உற்சவம் நடைபெறுகிறது.

தேரோட்டம்

6-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் திருத்தேரில் எழுந்தருள்கிறார். பின்னர் விழாவின் சிகர நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு நடக்கிறது. 7-ந் தேதி பரிவேட்டை நிகழ்ச்சியும், குதிரை வாகன உற்சவமும், 8-ந் தேதி தெப்போற்சவம், சேஷ வாகன உற்சவமும் நடைபெறுகிறது.

9-ந் தேதி சந்தான சேவையும், 10-ந் தேதி காலை 9 மணிக்கு வசந்த நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.


Next Story