குழந்தைகளுடன் காலை உணவு சாப்பிட்ட மேயர்
நெல்லையில் குழந்தைகளுடன் மேயர் காலை உணவு சாப்பிட்டார்.
நெல்லை மாநகராட்சி 16-வது வார்டு லாலுகாபுரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாநகராட்சி மேயர் சரவணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் பள்ளி குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்டார். தொடர்ந்து குழந்தைகளுக்கு பாடப்புத்தகங்களை வழங்கினார். தொடர்ந்து பள்ளியில் உள்ள கழிப்பறை சுத்தமாக உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டார். பின்னர் 4 மண்டலங்களில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் ஒரே வண்ணம் தீட்டி, அதில் அரசு திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் பள்ளி சுவரில் விளம்பரம் செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் அன்னை வேளாங்கண்ணி நகர் நியாஸ் காலனி, ஆசாத்சாலை ஆகிய பகுதிகளில் சாலை பணிகள் தொடங்குவது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மேயர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார். பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்கவும், குற்றாலம் சாலையில் கழிவுநீர் வாறுகால் தூர்வாரவும், முடிக்கப்படாமல் உள்ள பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைவில் முடிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதேபோல் நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்ட பணிகள் மற்றும் கோவில் உள் தெப்பக்குளம் சீரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தார். உதவி செயற்பொறியாளர் பைஜூ, இளநிலை பொறியாளர் விவேகானந்தன், சுகாதார அலுவலர் இளங்கோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.