அளவுக்கு அதிகமாக மதுகுடித்த மெக்கானிக் பலி
ஆரணி அருகே அளவுக்கு அதிகமாக மதுகுடித்த மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.
ஆரணி
ஆரணியை அடுத்த துந்தரீகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் தினகரன் (வயது 32). சென்னையில் உள்ள தனியார் செல்போன் டவர் அமைக்கும் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.
இவருக்கு ஆரணியா அடுத்த அக்ராப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சரோஜினி என்ற பெண்ணுடன் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தினகரன் மது போதைக்கு அடிமையாகியதாக கூறப்படுகிறது.
கடந்த சிலநாட்களுக்கு முன்பு மனைவி சரோஜினி அவரது தாய் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில் தினகரனும் தனது தாய் வீடான துந்தரீகம்பட்டு கிராமத்திற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சனிக்கிழமை சாமி கும்பிடுவதற்காக வந்துள்ளார்.
அப்போது அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக கூறப்படுகிறது. இன்று காலை நீண்டநேரமாகியும் அவர் எழுந்திருக்காமல் மயக்கநிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து தினகரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது தாய் வசந்தா ஆரணி தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.