வியாபாரிக்கு சரமாரி கத்திக்குத்து
திண்டுக்கல்லில் வியாபாரியை கத்தியால் குத்திய உறவினர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வியாபாரி
திண்டுக்கல் முத்தழகுப்பட்டி செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 35). கீரை வியாபாரி. நேற்று காலையில் இவர், மொச்சைக்கொட்டை விநாயகர் கோவில் தெருவில் வழக்கம் போல் வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முத்தழகுப்பட்டியை சேர்ந்த நந்தகுமாரின் உறவினர் அஜித்குமார் (24), அவருடைய நண்பர் மேட்டுப்பட்டியை சேர்ந்த தளபதி (23) ஆகியோர் நந்தகுமாரிடம் தகராறில் ஈடுபட்டனர்.
தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அஜித்குமார் தான் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து நந்தகுமாரை சரமாரியாக குத்தினார். இதில் அவருடைய கை, காது பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் அலறித்துடித்த அவர், ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். இதையடுத்து 2 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நந்தகுமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
2 பேர் கைது
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சம்பவம் குறித்த புகாரின் பேரில் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வியாபாரியை குத்திவிட்டு தலைமறைவான அஜித்குமார் நண்பருடன் மேட்டுப்பட்டி பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அஜித்குமாருக்கும், நந்தகுமாருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்ததும், அதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அஜித்குமார் பட்டா கத்தியால் நந்தகுமாரை குத்தியதும் தெரியவந்தது.