சுரங்கனார் நீர்வீழ்ச்சி தண்ணீரை குளத்துக்கு கொண்டு வரவேண்டும்


சுரங்கனார் நீர்வீழ்ச்சி தண்ணீரை குளத்துக்கு கொண்டு வரவேண்டும்
x
தினத்தந்தி 9 July 2023 6:45 PM GMT (Updated: 10 July 2023 12:03 PM GMT)

கூடலூர் அருகே சுரங்கனார் நீர்வீழ்ச்சி தண்ணீரை குளத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தேனி

சுரங்கனார் நீர்வீழ்ச்சி

தேனி மாவட்டம் கூடலூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மழைகால அருவி என்று அழைக்கப்படும் சுரங்கனார் நீர்வீழ்ச்சி உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலைப் பகுதியில் பெய்யும் மழை நீர், இங்கு நீர்வீழ்ச்சியாக கொட்டுகிறது. இந்த தண்ணீர் ஒட்டாண் குளத்துக்கு வந்தது. இதன் மூலம் ஒட்டாண்குளம், ஈஸ்வரன் கோவில் புலம், பாரவந்தான், ஒழுகுவழி சாலை ஆகிய பகுதிகளில் 500 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் விவசாயம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுரங்கனார் நீர்வீழ்ச்சி அருகே திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் நீர்வீழ்ச்சியில் இருந்து தண்ணீர் வரும் பாதை முழுவதும் மண் சரிந்து காட்சி அளிக்கிறது.

நீர்வரத்து

தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் நேற்று முன்தினம் முதல் நீர்வீழ்ச்சியில் இருந்து தண்ணீர் விழுகிறது. ஆனால் நீர்வரத்து பாதையில் மண் விழுந்து கிடப்பதால் திசைமாறி முல்லைப்பெரியாற்றில் கலந்து வருகிறது. இதனால் ஒட்டாண்குளத்துக்கு நீர்வரத்து இல்லாமல் நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாசனத்துக்கு தண்ணீர் பயன்படுத்த முடியவில்லை.

கூடலூர் பகுதியில் முல்லைப்பெரியாற்றில் இருந்து வைரவன் வாய்க்கால் மூலம் கூட்டாறு வழியாக வினாடிக்கு 5 கன அடி வீதம் தண்ணீர் இந்த குளத்திற்கு 10 மாதங்களுக்கு திறந்து விடப்படுகிறது. அவற்றின் மூலம் பாசனத்துக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை.

விவசாயிகள் கோரிக்கை

எனவே தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய சுரங்கனார் நீர்வீழ்ச்சி பகுதியில் இருந்து ஒட்டாண்குளத்துக்கு தண்ணீர் வரும் பாதையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

சுரங்கனார் நீர்வீழ்ச்சி பகுதியில் தண்ணீர் வரும் பாதையை சீரமைத்து ஒட்டாண் குளத்துக்கு நீர் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் விைரந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story