தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் மூலவர் மீது சூரிய கதிர்கள் விழும் அதிசய நிகழ்வு
தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் மூலவர் மீது சூரிய கதிர்கள் விழும் அதிசய நிகழ்வு நடந்தது.
மதுரை. செப்.21-
கோவில்களின் கருவறையிலுள்ள மூலவர் மீது சூரிய ஒளி கதிர்கள் படர்வதை சூரிய பூஜை கோவில்கள் என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு சூரிய பூஜை கோவில்கள் இருந்தன, தற்போது ஒரு சில கோவில்களே உள்ளன. அந்த வகையில் மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில் ஒரு சூரிய பூஜை கோவிலாகும். இங்குள்ள கருவறைக்கு நேர் எதிரே உள்ள மூன்று துவாரங்கள் வழியாக சூரிய ஒளி கதிர்கள் ஊடுருவி முக்தீஸ்வரப் பெருமானை தழுவி செல்லும். இந்த அரிய நிகழ்வு வருடத்திற்கு 2 மாதங்கள் நடைபெறுகிறது. முதலாவதாக மார்ச் மாதத்தில் 11-ந் தேதி முதல் 23-ந் தேதி வரையும் நடக்கும். இதைதொடர்ந்து செப்டம்பர் மாதம் 19-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை காலை 6.15 மணி முதல் 6.25 மணி வரை ஒரு முறையும், 6.40 மணி முதல் 6.50 மணி வரை இரண்டாவது முறையும் சூரிய ஒளி மூலவர் மீது விழும் அபூர்வ நிகழ்வு நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சூரிய பூஜை நிகழ்வு நேற்று முன் தினம் தொடங்கியது. வானம் மேக மூட்டமாக இருந்ததால் லேசாக சூரிய கதிர்கள் தென்பட்டது. மேலும் நேற்று காலை சூரிய ஒளி துவாரங்கள் வழியே நந்தியை கடந்து மூலஸ்தானத்திற்கு சென்றது. இதைதொடர்ந்து 3 துவாரங்களில் இருந்தும் சூரிய ஒளி மூலவர் மீது விழும் நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வு தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இதை காண அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் நமசிவாய நமசிவாய என கோஷங்கள் முழங்க முக்தீஸ்வரரை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.