நிதி உதவி கேட்டு பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் கலெக்டரிடம் மனு
நிதி உதவி கேட்டு பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.
திருச்சி மெயின்கார்டுகேட் அருகே மேலிப்புலிவார்டுரோட்டில் கடந்த அக்டோபர் மாதம் ஹீலியம் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் பலியானார். இதில் ஜீவானந்தம் என்ற சிறுவன் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தநிலையில் திருச்சி பொன்மலை அம்பிகாபுரத்தை சேர்ந்த ஜீவானந்தத்தின் தாய் சித்ரா தனது மகனுடன் திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அங்கு அவர் கலெக்டரிடம் நிதி உதவி கேட்டும், தனது மகனுக்கு மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் மனு அளித்தார். இதனைதொடர்ந்து அவர் கூறுகையில், ஹீலியம் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் எனது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். தற்போது எனது மகனுக்கு மேலும் சிகிச்சை தேவைப்படுகிறது. அரசிடம் இருந்து எனக்கு எந்த நிவாரணமோ, இழப்பீடோ வழங்கப்படவில்லை. 3 குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன். எனது மகனின் மருத்துவ செலவுக்காக ரூ.10 ஆயிரம் வழங்கினார்கள். ஆனால் அதை சமூகவலைதளங்களில் பெரியஅளவில் தொகை வந்துவிட்டதாக தவறான தகவலை பரப்பி விட்டார்கள். இதனால் நான் யாரிடம் உதவி கேட்டு சென்றாலும், அரசிடம் இருந்து நிவாரண தொகை கிடைத்து இருக்குமே என்று கூறுகிறார்கள். இந்த விபத்தால் எனது மகனுக்கு மருத்துவ செலவுக்கூட செய்ய முடியாமல் தவித்து வருகிறேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.