பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது; கல்லூரி மாணவர் சாவு
திருமங்கலம் அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் இறந்தார்.
திருமங்கலம்,
மதுரை அருகே உள்ள ஆண்டார் கொட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் மரியதாஸ். இவரது மகன் யஷ்வந்த்குமார் (வயது 19). இவர் பெருங்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருடன் விரகனூரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சூரிய பிரகாஷ் (19), திருப்புவனத்தைச் சேர்ந்த முருகன் மகன் செந்தூர்பாபா (19) ஆகியோர் படித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து யஷ்வந்த் குமார் தனது நண்பர்கள் சூரியபிரகாஷ், செந்தூர்பாபா ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் திருமங்கலத்தை அடுத்துள்ள ஆலம்பட்டிக்கு நண்பரை பார்க்க சென்றனர். பார்த்துவிட்டு மாலையில் 3 பேரும் அங்கிருந்து புறப்பட்டனர். திருமங்கலம் அருகே உள்ள ராஜபாளையம் பிரிவு விலக்கு பகுதியில் வந்தபோது அங்குள்ள வளைவில் உள்ள பாலத்தை கடக்க முயன்றனர். அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அருகில் இருந்தவர்கள் இவர்களை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி யஷ்வந்த்குமார் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சூரியபிரகாஷ், செந்தூர் பாபா சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.