பொள்ளாச்சி-கோவை சாலையில் பரபரப்புஓடும் வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது


பொள்ளாச்சி-கோவை சாலையில் பரபரப்புஓடும் வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது
x
தினத்தந்தி 26 May 2023 12:15 AM IST (Updated: 26 May 2023 12:27 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி-கோவை சாலையில் ஓடும் வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி-கோவை சாலையில் ஓடும் வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஓடும் வேனில் தீப்பிடித்தது

ஈரோடு மாவட்டம் பண்ணாரியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(வயது 52). கோவில் ஓதுவார். இவர், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பொள்ளாச்சியில் நடைபெறும் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு பங்கேற்க ஆம்னி வேனில் நேற்று காலை வந்து கொண்டிருந்தார். அதன்படி வேனில் கிருஷ்ணன் உள்பட 6 பேர் பயணம் செய்துள்ளனர். ஆம்னி வேன், கியாஸ் மற்றும் பெட்ரோலில் இயங்கக்கூடியது. பொள்ளாச்சி-கோவை மெயின்ரோடு மகாலிங்கபுரம் அருகே வந்தபோது வேனில் கியாஸ் குறைவாக இருந்துள்ளது.

இதையறிந்த கிருஷ்ணன், அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேனுக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு அங்கிருந்து மீண்டும் புறப்பட்டுள்ளார். அப்போது அவர், வேனின் என்ஜினுக்கான எரிபொருளை கியாசில் இருந்து பெட்ரோலுக்கு மாற்றி உள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் வேனின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணன் உள்பட 6 பேரும் வேனில் இருந்து அவசர அவசரமாக இறங்கி வெளியே வந்தனர். இதையடுத்து சிறிது நேரத்தில் வேனின் முன்பக்கம் தீப்பிடித்து எரிந்தது.

பரபரப்பு

இதைபார்த்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தீயணைப்பு கருவியை கொண்டு வேனில் பிடித்து எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்துக்கு பொள்ளாச்சி தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.

வேனில் புகை வந்தபோதே கிருஷ்ணன் உள்பட 6 பேரும் அவசரமாக இறங்கி வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். ஓடும் வேனில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story