மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான போட்டியில் தி மு க வேட்பாளர் வெற்றி


மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான போட்டியில் தி மு க வேட்பாளர் வெற்றி
x

கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியில் காலி பதவியிடங்களுக்கான இடைத்தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான போட்டியில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்

கடலூர்

கடலூர்

இடைத்தேர்தல்

கடலூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 4 ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவிக்கும், 26 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் என மொத்தம் 31 காலி பதவி இடங்களை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் கடந்த 9-ந் தேதி நடைபெற்றது.

இந்த தேர்தலுக்காக மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 8 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 17 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 43 பேரும் என மொத்தம் 68 பேர் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், மனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு 15 மனுக்கள் திரும்ப பெறப்பட்டது. இதன் மூலம் 20 வார்டுகளுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வாகினர். மேலும் 2 வார்டுகளுக்கு ஒருவர் கூட மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால் மீதமுள்ள கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 26-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும், மருதாடு, சேப்ளாநத்தம் (தெற்கு), டி.புத்தூர், நஞ்சைமகத்து வாழ்க்கை ஆகிய பகுதி ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவிக்கும், கடலூர் முதுநகர் (நான்முனிசிபல்) 9-வது வார்டுக்கும், கீழ்குமாரமங்கலம் 6-வது வார்டுக்கும், காட்டுமன்னார்கோவில் ஒன்றியம் நாட்டார்மங்கலத்தில் 3-வது வார்டுக்கும், குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வடக்குத்து ஊராட்சியில் 8-வது வார்டுக்கும் இடைத்தேர்தல் நடந்தது.

வாக்கு எண்ணிக்கை

பின்னர் வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையமான கடலூர், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, கம்மாபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 26-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. சார்பில் மனோரஞ்சிதம், அ.ம.மு.க. சார்பில் வாணிஸ்ரீ, பா.ம.க. சார்பில் தமிழ்ச்செல்வி பகவத்சிங் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் தி.மு.க. வேட்பாளர் மனோரஞ்சிதம் வெற்றி பெற்றார்.

சான்றிதழ்கள்

இதேபோல் மருதாடு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாராயணன், சேப்ளாநத்தம் (தெற்கு) ஊராட்சி மன்ற தலைவராக அஞ்சலி, டி.புத்தூர் குணபாலன், நஞ்சைமகத்துவாழ்க்கை ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்ட பழனியம்மாள் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் கடலூர் ஓ.டி. (முனிசிபல் அல்லாதது) 9-வது வார்டு ரவி, கீழ்குமாரமங்கலம் 6-வது வார்டு ராஜலட்சுமி, வடக்குத்து 8-வது வார்டு மாலதி, நாட்டார்மங்கலம் 3-வது வார்டு உறுப்பினராக போட்டியிட்ட நாகராஜன் ஆகியோரும் வெற்றி பெற்றனர். இதையடுத்து அவர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினர்.


Next Story