'பார்க்கிங்'கில் நிறுத்தியிருந்த கல்லூரி பஸ்சை ஓட்டிச்சென்ற மர்மநபர்
கண்ணமங்கலம் அருகே பார்க்கிங்கில் நிறுத்தியிருந்த கல்லூரி பஸ்சை ஓட்டிச்சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணமங்கலம் அருகே பார்க்கிங்கில் நிறுத்தியிருந்த கல்லூரி பஸ்சை ஓட்டிச்சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஸ் மாயம்
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த படவேட்டில் ரேணுகாம்பாள் கோவில் உள்ளது. கோவில் சார்பில் அங்கு இலவச பார்க்கிங் உள்ளது. இங்கு தனியார் கல்லூரி பஸ்சை டிரைவர் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை கல்லூரியில் பயிலும் மாணவிகளை அழைத்து செல்ல டிரைவர் வேல்முருகன் பஸ்சை எடுக்க வந்தார். அப்போது அங்கு நிறுத்தியிருந்த பஸ் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சந்தவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் படவேடு கேசவபுரம் பெட்ரோல் 'பங்க்'கில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கல்லூரி பஸ் படவேடு பகுதியில் இருந்து சந்தவாசல் நோக்கி சென்ற காட்சி பதிவாகியுள்ளது.
பஸ் மீட்பு
இதனையடுத்து ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் உத்தரவுப்படி, கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சந்தவாசல் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கல்லூரி பஸ், ஜமுனாமரத்தூர் அருகே உள்ள பள்ளத்தூர் மலையடிவார பகுதியில் நிறுத்தப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து போலீசார் பள்ளத்தூருக்கு சென்று பஸ்சை மீட்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், 26-ந்தேதி பிற்பகல் 2 மணி அளவில் ஒருவர் பஸ்சை எடுத்துள்ளார். அங்கு இருந்தவர்கள் விடுமுறை நாளில் ஏன் பஸ்சை எடுக்கிறீர்கள் என கேட்டதற்கு, சர்வீஸ் செய்ய கொண்டு போகிறேன் என கூறியுள்ளார். பஸ்சை எடுத்து சென்ற போது காம்பவுண்ட் சுவர் மீது பஸ் உரசியதும் தெரியவந்தது.
மேலும் பஸ்சின் சாவி கடந்த வியாழக்கிழமை காணாமல் போயுள்ளது. மாற்றுச்சாவி மூலம் டிரைவர் வேல்முருகன் பஸ்சை இயக்கி வந்ததும், பஸ்சில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.ஆர்.எஸ். கருவியும் பழுது அடைந்துள்ளதும் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.