பெயர் மாற்றம் செய்து கொண்ட பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும்


பெயர் மாற்றம் செய்து கொண்ட பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும்
x

ஆரணியில் தனது பெயரில் உள்ள சொத்தை பேரன் பெயர் மாற்றம் செய்து கொண்ட பத்திரத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதவி கலெக்டரிடம் மூதாட்டி புகார் கொடுத்தார்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியில் தனது பெயரில் உள்ள சொத்தை பேரன் பெயர் மாற்றம் செய்து கொண்ட பத்திரத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதவி கலெக்டரிடம் மூதாட்டி புகார் கொடுத்தார்.

தான செட்டில்மென்ட்

ஆரணி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன குழந்தை (வயது 85). இவருக்கு கண் பார்வை குறைவு மற்றும் மாற்றுத்திறனாளி. வயது முதிர்வு காரணமாக முதியோர் உதவித்தொகை பெற்று ஜீவனம் செய்து வருகிறார்.

இவரது பேரன் கார்த்தி என்பவர் இவரது கண் பார்வை குறைபாட்டை பயன்படுத்தி இவருக்கு சொந்தமான சொத்தை தான செட்டில்மென்ட் பத்திரமாக பதிவு செய்துள்ளார். இதுகுறித்து தெரிய வந்ததும் அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து சின்னகுழந்தை இன்று ஆரணி உதவி கலெக்டர் எம்.தனலட்சுமியிடம் மனு அளிக்க ஆட்டோவில் வந்தார். இதையறிந்த உதவி கலெக்டர் நேரடியாக மூதாட்டியிடம் சென்று மனுவை பெற்று விசாரணை நடத்தினார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனக்கு 3 மகன்கள். அதில் 2 மகன்கள் ஏற்கனவே இறந்து விட்டார்கள். தற்போது ராஜேந்திரன் என்ற மகனுடன் வசித்து வருகிறேன். கடந்த 4 வருடங்களாக கண் பார்வை சரியாக தெரியாது.

வலது கண் முற்றிலுமாக பார்வை இழந்து விட்டது. இடது கண்ணிலும் பார்வை குறைபாடு உள்ளது. எனது மகன் ராஜேந்திரன் மட்டும் என்னை கடந்த 4 ஆண்டுகளாக பராமரித்து மருத்துவ சிகிச்சை செய்து வந்தார்.

பத்திரம் பதிவு

இறந்த மூத்த மகன் நடராஜனின் மகன் கார்த்தி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

கடந்த 5.4.2021-ம் தேதி ராஜேந்திரன் வெளியில் சென்று இருப்பதை தெரிந்த கார்த்தி வீட்டுக்கு வந்து, எனது சம்மதத்தை கேட்காமல் ஆரணி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று கார்த்தி பெயருக்கு எனக்கு தெரியாமலும், என்னை ஏமாற்றியும் தான செட்டில்மென்ட் பத்திரம் எழுதி பதிவு செய்துள்ளார்.

இதற்கு உடந்தையாக சார்பதிவாளர், ஆவண எழுத்தாளர், கார்த்தி, சாட்சியாளர்கள் கண்ணன் மற்றும் ராஜேஷ் இருந்துள்ளார்கள்.

எனது கடைசி காலத்தில் என்னை பராமரித்து வந்த எனது மகன் ராஜேந்திரன் பெயருக்கு எனது வீட்டினை பெயர் மாற்றம் செய்யலாம் என்று வில்லங்கச் சான்று பார்க்கும்போது கார்த்தி பெயருக்கு தான செட்டில்மென்ட் எழுதி கொடுத்ததாக இருப்பதை அறிந்து மிகவும் அதிர்ச்சியாகவும் ஏமாற்றப்பட்டு இருப்பதையும் அறிந்தேன்.

ரத்து செய்ய வேண்டும்

இது நாள் வரை மேற்படி சொத்தில் நானும் என் மகன் ராஜேந்திரன் 2 பேர் மட்டுமே முழு அனுபவத்திலும் பராமரிப்பிலும் இருந்து வருகிறது.

எனவே எனது பார்வை குறைபாட்டை பயன்படுத்தி என்னை ஏமாற்றி எழுதிய தான செட்டில்மென்ட் ஆவணத்தை ரத்து செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.

மேலும் இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து எனக்கு தகுந்த நீதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story