விவசாய நிலத்துக்கு பட்டா வழங்கக்கோரி நரிக்குறவ இன மக்கள் நூதன போராட்டம்


விவசாய நிலத்துக்கு பட்டா வழங்கக்கோரி நரிக்குறவ இன மக்கள் நூதன போராட்டம்
x

விவசாய நிலத்துக்கு பட்டா வழங்கக்கோரி நரிக்குறவ இன மக்கள் நூதன போராட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்

46 ஆண்டுகளுக்கு முன்பு...

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூர் பகுதியில் வசிக்கும் நரிக்குறவ இன மக்கள் கடந்த 46 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் எதிரே நூதன போராட்டத்தில் நேற்று காலை முதல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு தேசிய தென்னிந்திய நதிகளின் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். போராட்டத்தில் கலந்து கொண்ட நரிக்குறவர் இன மக்கள் கழுத்தில் தூக்குக்கயிறை மாட்டி கொண்டும், அரை நிர்வாணமாகவும், இலை, தழைகளை கட்டிக்கொண்டு, கையில் மண்டை ஓடுகளை வைத்து கொண்டு, கோவணம் அணிந்து கொண்டும், வயிற்றில் கையால் அடித்து கொண்டும் பல்வேறு விதமான நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோஷங்களை எழுப்பினர்

மேலும் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களுக்கு பட்டா வழங்கக்கோரியும், விவசாயத்தை காப்பாற்ற கோரியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். அவர்களிடம் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்றனர். ஆனால் பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் அவர்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர். கலெக்டர் வந்து பேச வேண்டும் இல்லையென்றால் எங்களை கைது செய்யுங்கள் என்றனர். நரிக்குறவ இன மக்களின் போராட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க.வினர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்து போராட்டத்திலும் கலந்து கொண்டனர். நரிக்குறவ இன மக்களின் போராட்டம் குறித்து அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். இந்த நரிக்குறவ இன மக்களுக்கு எறையூரில் விவசாயம் செய்வதற்கு 353 ஏக்கர் நிலத்தை கொடுத்தார். அந்த நிலத்தில் அவர்கள் விவசாயம் செய்து வந்தனர். 12 கிணறுகள் வெட்டி உள்ளனர்.

தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம்

தற்போது அந்த நிலத்தை திடீரென்று சிப்காட் தொழிற்சாலைக்கு கொடுக்க போவதாக கலெக்டர் தெரிவித்தாக கூறப்படுகிறது. ஏற்கனவே இது தொடர்பாக ஆ.ராசா எம்.பி.யை பார்த்தபோது, நரிக்குறவ இன மக்களுக்கு தலா ஒரு ஏக்கர் நிலம் தர நடவடிக்கை எடுப்பதாக கூறினார். தற்போது கலெக்டர் தர முடியாது என்று கூறுவதாக தெரிகிறது. இதனால் தான் நரிக்குறவ இன மக்கள் தற்போது நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே நரிக்குறவ குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்ட விவசாய நிலத்துக்கு, அதற்கு பட்டா உடனடியாக வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்டமாக நரிக்குறவ இன மக்கள் சென்னையில் உள்ள தமிழக அரசு தலைமை செயலகத்துக்கு சென்று விஷத்தை குடித்து விட்டு தற்கொலை செய்து கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள், என்றார்.


Next Story