புதிய கட்டளை மேட்டுவாய்க்காலை தூர்வாரும் பணி
புதிய கட்டளை மேட்டுவாய்க்காலை தூர்வாரும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
நீர்வளத்துறையின் சார்பில் நேற்று கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், வதியம் (கண்டியூர்), வைகநல்லூர் ஆகிய கிராமங்களில் புதிய கட்டளை மேட்டுவாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த தூர்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையருமான அனில் மேஷ்ராம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உடனிருந்தார். டெல்டா மாவட்டங்களின் அனைத்து பாசன வாய்க்கால்களும் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டு வருகிறது. அந்தவகையில், கரூர் மாவட்டத்தில் கடந்த 1-ந்தேதி முதல் தூர்வாரும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை 147.33 கிலோமீட்டர் அளவிற்கான பாசன வாய்க்கால்களை ரூ.6.48 கோடி செலவிலான 38 பணிகள் எடுக்கப்பட்டு இந்த தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளை மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பதற்கு முன்பாகவோ அல்லது வருகிற 31-ந் தேதிக்குள்ளாகவோ முடிப்பதற்கு திட்டமிடப்பட்டு மாவட்டம் முழுவதும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதன் அடிப்படையில், நேற்று குளித்தலை வட்டம், வதியம் (கண்டியூர்), வைகநல்லூர் ஆகிய கிராமங்களின் வழியாக செல்லும் புதிய கட்டளை மேட்டுவாய்க்கால்களை தலா ரூ.24.75 லட்சம் மதிப்பீட்டில் நீர்வளத்துறையின் சார்பில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.