புதிய தீயணைப்பு நிலையத்தை விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
புதிய தீயணைப்பு நிலையத்தை விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
திருவாரூரில் புதிய தீயணைப்பு நிலையத்தை வி்ரைவில் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடம் மாற்றம்
திருவாரூர் கமலாலயம் குளத்தின் தென்கரை பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் குதிரை லாயமாக பயன்படுத்தப்பட்ட ஒரு கட்டிடத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை நிலையம் கடந்த 1946-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 100 ஆண்டுகளை கடந்த பழமை வாய்ந்த ஒடுகளால் வேயப்பட்ட கட்டிடம் என்பதால் மேற்கூரை முற்றிலும் பழுதடைந்துள்ளது. இதனால் மழை காலங்களில் கட்டிடம் ஒழுகுகின்ற நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் இந்த அலுவலகம் எதிரில் உள்ள சிமெண்டு கூரை கட்டிடத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது.
ரூ.1 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கீடு
திருவாரூர் தீயணைப்பு நிலையத்திற்கு சொந்தமாக புதிய கட்டிடம் கட்டுவதற்காக ரூ. 1 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தாலுகா போலீஸ் நிலையம் அருகில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தீயணைப்பு நிலைய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடம் 3 தளங்களுடன், 3 வாகனங்கள் நிறுத்துவற்கான இடவசதி என அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
திருவாரூரில் புதிய தீயணைப்பு நிலையம் கட்டப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது. எனவே தீயணைப்பு நிலையத்திற்கு புதிய தீயணைப்பு வாகனம், தேவைக்கு ஏற்ப போதிய தீயணைப்பு வீரர்களை நியமித்து நிலையத்தை விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.