புதிதாக கட்டப்படும் பஸ் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைக்க வேண்டும்


புதிதாக கட்டப்படும் பஸ் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைக்க வேண்டும்
x
தினத்தந்தி 8 Aug 2023 12:15 AM IST (Updated: 8 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

இளையான்குடியில் புதிதாக கட்டப்படும் பஸ் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் வைக்க வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சிவகங்கை

இளையான்குடி

இளையான்குடியில் புதிதாக கட்டப்படும் பஸ் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் வைக்க வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பேரூராட்சி கூட்டம்

இளையான்குடி பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் நஜுமுதீன் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத், துணை தலைவர் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரவு, செலவினங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. முன்னதாக முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் பேரூராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கியதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உறுப்பினர் செய்யது ஜமீமா, உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்கியதற்கு நன்றி தெரிவித்து, அனைத்து வார்டு பகுதிகளுக்கும் நலத்திட்ட பணிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். துணை தலைவர் இப்ராகிம், புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலையத்திற்கு முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

பேட்டரி வாகனங்கள்

உறுப்பினர் அல் அமீன் பேசும் போது, சமுத்திர ஊருணியை சுற்றி போடப்பட்டுள்ள தார் சாலை மண் சாலையாக மாறிவிட்டது. கட்டிட கழிவுகளை கொட்டி தார் சாலை சேதம் அடைந்துள்ளதால் கட்டிட கழிவுகளை கொட்ட அனுமதிக்க கூடாது என்ற தகவல் பலகை வைக்க கேட்டுக்கொண்டார். உறுப்பினர் ஷேக் அப்துல் ஹமீது கூறும் போது, குப்பைகளை சேகரிக்க 15 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட உள்ளது. அதை அனைத்து வார்டு பகுதிகளுக்கும் பணியில் ஈடுபடுத்த கூடுதலாக 18 வாகனங்களாக வழங்கும்படி கேட்டுக் கொண்டார்.

உறுப்பினர் நாகூர் மீரா குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து செயல்படாமல் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களை பழுது பார்த்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவும், இளையான்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

செயல் அலுவலர் கோபிநாத் உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story