புதிதாக அமைந்த மண்மேடால் பரபரப்பு
பாக்கம் ஏரியில் புதிதாக அமைந்த மண்மேடால் பரபரப்பு ஏற்பட்டது.
மூங்கில்துறைப்பட்டு
வடபொன்பரப்பி அருகே உள்ள பாக்கம் ஏரியில் நேற்று காலை அப்பகுதியில் புதிதாக குழி தோண்டி மூடப்பட்ட மண்மேடு காணப்பட்டது. இதனால் மர்ம நபர்கள் யாரையாவது கொன்று உடலை புதைத்து சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் அப்பகுதி மக்களிடையே உருவானது. இதுபற்றி பொதுமக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் விரைந்து வந்து மண்மேடு குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனது பசுமாட்டின் கன்று இறந்ததையடுத்து அதை குழிதோண்டி புதைத்து இருந்ததும், அதை தனது செல்போனில் படம் பிடித்து வைத்திருந்ததும் தொியவந்தது. இதையடுத்து கன்று புதைக்கப்பட்டதை செல்போனில் இருந்த புகைப்படத்தை வைத்து உறுதி செய்த போலீசார் மன நிம்மதிய பெரு மூச்சு விட்டபடி அங்கிருந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.