புதிதாக அமைய உள்ள கல்குவாரியில் ஆய்வு ஆர்.டி.ஓ., தாசில்தாரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்


புதிதாக அமைய உள்ள கல்குவாரியில் ஆய்வு ஆர்.டி.ஓ., தாசில்தாரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்
x

திருக்கழுக்குன்றம் அருகே புதிதாக அமைய உள்ள கல்குவாரியில் ஆய்வு செய்ய வந்த ஆர்.டி.ஓ., தாசில்தாரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த நடுவக்கரை ஊராட்சி குண்ணவாக்கம் கிராமத்தில் தனியார் கல்குவாரி நிறுவனம் 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது. இந்த குவாரியில் அளவுக்கு அதிகமாக மலையை குடைந்து கற்கள் எடுத்ததாக கூறப்படுகிறது கல்குவாரியில் வைக்கும் வெடி அதிர்வால் அருகில் இருக்கும் வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளனதாகவும், இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்த நிலையில் கோர்ட்டு அந்த நிறுவனத்திற்கு அபராதம் விதித்து குவாரியை மூடியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதே நிறுவனம் அருகில் உள்ள மலையை குடைந்து கல்குவாரி அமைக்க அனுமதி பெற்றதால் அந்த பகுதி பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் குவாரி அமைய உள்ள இடத்தை பார்வையிட வந்த செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. இப்ராஹிம் மற்றும் திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஸ்வரி ஆகியோர் குவாரிக்கு ஆதரவாக பேசியதால் அவர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் அவர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர். இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது மேலும் கல்குவாரி அமைப்பதை தடுத்து நிறுத்தவில்லை என்றால் மிக பெரிய அளவில் போரட்டம் நடத்தப் போவதாகவும் ரேஷன்கார்டு, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருப்பி தர போவதாகவும் அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.


Next Story