மக்களை தேடி மருத்துவத்திட்ட பயனாளிகள் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது


மக்களை தேடி மருத்துவத்திட்ட பயனாளிகள் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது
x
தினத்தந்தி 10 Dec 2022 12:15 AM IST (Updated: 10 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மக்களை தேடி மருத்துவத்திட்ட பயனாளிகள் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது

கோயம்புத்தூர்

கோவை

தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி

கோவை அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் 200 பேருக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி, கோவை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.2½ கோடியில் புனரமைக்கப்பட்ட கட்டிடம் உள்பட மாவட்டம் முழுவதும் ரூ.8 கோடியே 78 லட்சத்தில் கட்டிடங்கள் மற்றும் அதிநவீன மருத்துவ உபகரணங்களை திறக்கும் நிகழ்ச்சி அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். மேயர் கல்பனா முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், செந்தில்பாலாஜி ஆகியோர் திறந்து வைத்து பேசினார்கள். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆண்டுக்கு 10 ஆயிரம் மாணவர்கள்

கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 5 ஆயிரத்துக்கும் மேல் புறநோயாளிகள் வந்து செல்கிறார்கள். இங்கு தரமான சிகிச்சை அளிக்க மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் டி.சி.ஸ்கேன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர மாவட்டத்தில் 19 கட்டிட பணிகள் முடிவடைந்து தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஆண்டுதோறும் 10 ஆயிரத்து 825 மருத்துவ மாணவர்கள் படித்து வெளியேறுகிறார்கள். இன்னும் 6 மாவட்டங்களில் புதிய கல்லூரிகள் அமைக்கவும், 250 ஆரம்ப மற்றும் 2,500 துணை சுகாதார நிலையங்கள் அமைக்கவும், தேவையான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 7.5 சதவீத ஒதுக்கீட்டில் இந்த ஆண்டில் 565 பேருக்கு இடம் கிடைத்து உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மாண்டஸ் புயல் தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுத்து உள்ளார். பாதுகாப்பு கருதி சென்னையில் மரங்கள் அதிகமாக உள்ள பூங்காக்கள் 2 நாளுக்கு மூடப்பட்டு உள்ளன. உயர் மின்கோபுரத்தில் உள்ள விளக்குகள் அனைத்தும் பாதுகாப்பு கருதி கீழே இறக்கப்பட்டு உள்ளன.

புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள துணை சுகாதார நிலையங்களில் தேவையான மருந்து, மாத்திரைகள் தயாராக வைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் களப்பணியாளர்களும் தயாராக இருக்கிறார்கள். பருவமழை காரணமாக கோவையில் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தற்போது அது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

ஒரு கோடியை நெருங்கியது

மக்களை தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டம் தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. அந்த திட்டத்தில் பயனாளிகள் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது. இன்னும் 7 அல்லது 8 நாட்களில் ஒரு கோடியை எட்டி விடும். தற்போது தற்போது 98 லட்சத்து 84 ஆயிரத்து 395 பேர் என்ற அளவில் உள்ளது.

இந்த நிலையில் ஒரு கோடியாகும் போது, பயனாளிக்கு மருந்துகள் வழங்கப்படும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பாக கலந்து கொள்வார். அந்த நிகழ்ச்சி எந்த பகுதியில், எப்போது நடத்தப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும். நமது நாட்டிலேயே போதிய மருத்துவ வசதி தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு பணியும் மேற்கொண்டார்.

விழாவில் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், துணை மேயர் வெற்றிச்செல்வன், கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மருத்துவ கல்லூரி இயக்குனர் சாந்திமலர், கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா, தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், முன்னாள் எம்.பி. ஏ.பி.நாகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. பனப்பட்டி தினகரன், மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story