செங்கல்பட்டில் போலி மது அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு..!

செங்கல்பட்டில் போலி மது அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பேருக்கரணை கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி (34), அவரது மனைவி அஞ்சலை (22), அஞ்சலையின் தாய் வசந்தா (40), பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வெண்ணியப்பன் (65), அவரது மனைவி சந்திரா (55) ஆகியோர் விஷ சாராயத்தை குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இதில் சின்னத்தம்பி, வசந்தா, வெண்ணியப்பன், சந்திரா ஆகியோர் தங்கள் வீடுகளிலேயே இறந்துள்ளனர். அஞ்சலை செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் விஷ சாராயம் அருந்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஷ சாராயத்தை விற்ற கரியன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த அம்மாவாசை (40) என்பவரும் அதே மதுபானத்தை அருந்தி உடல்நலம் சீராக காணப்பட்டபோதிலும் மருத்துவ சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதல்கட்ட விசாரணையில் இந்த இரண்டு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்ட நபர்கள் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை அருந்தி இருக்கலாம். விஷ சாராயம் என்பது எத்தனால் மற்றும் மெத்தனால் கலக்கப்பட்டது. இதை குடித்தால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். சில சமயங்களில் இறப்புகூட ஏற்படும். இந்த இரண்டு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், செங்கல்பட்டில் போலி மது அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 4 பேர் உயிரிழந்த நிலையில் மாரியப்பன் (65) என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.






