நர்ஸ் உயிரோடு எரித்துக்கொலை-நடுரோட்டில் கணவர் வெறிச்செயல்


நெல்லை அரசு ஆஸ்பத்திரி அருகே நடுரோட்டில் நர்ஸ் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கணவர் போலீசில் சரண் அடைந்தார்.

திருநெல்வேலி

நெல்லை அரசு ஆஸ்பத்திரி அருகே நடுரோட்டில் நர்ஸ் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கணவர் போலீசில் சரண் அடைந்தார்.

அரசு ஆஸ்பத்திரி நர்ஸ்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மனைவி அய்யம்மாள் (வயது 45). இவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.

இவர்கள் குடும்பத்துடன் பாளையங்கோட்டை அண்ணா நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து வந்தனர்.

நேற்று காலை அய்யம்மாள் வழக்கம்போல் பணிக்கு சென்றார். இரவு 7 மணியளவில் பணி முடிந்து அவர் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்தார்.

எரித்துக்கொலை

அவரை கணவர் பாலசுப்பிரமணியன் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். ஆஸ்பத்திரி அருகே உள்ள அண்ணாநகர் முதல் தெருவில் வந்தபோது, கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த பாலசுப்பிரமணியன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் திடீரென அய்யம்மாளை கத்தியால் குத்திவிட்டு தான் வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலால் அவரது தலையில் ஓங்கி அடித்துள்ளார். அப்போது பாட்டில் உடைத்து அய்யம்மாள் உடலில் மண்எண்ணெய் கொட்டியது. உடனே பாலசுப்பிரமணியன் அவரை உயிரோடு தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதனால் அய்யம்மாளின் உடலில் தீப்பற்றி வேதனை தாளாமல் அலறி துடித்தார். சிறிது நேரத்தில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

போலீசில் கணவர் சரண்

இந்த சம்பவத்தில் பாலசுப்பிரமணியனுக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப், இன்ஸ்பெக்டர்கள் வாசிவம், தனலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இறந்த அய்யம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பாலசுப்பிரமணியன் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் முன்னிலையில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடும்பம்

கொலை செய்யப்பட்ட அய்யம்மாளுக்கு வில்டன் இப்ராகிம், சிவராஜ், சிப்ரல் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். பாலசுப்பிரமணியன் குடும்பத்துடன் முஸ்லிம் மதத்துக்கு மாறி உள்ளார். அவர் தனது பெயரை அக்பர் இப்ராகிம் என்று மாற்றி உள்ளார்.

பாலசுப்பிரமணியன் முன்பு வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். பின்னர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால், சொந்த ஊருக்கு வந்தார். கணவன்-மனைவிக்கு இடையே தகராறு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் மீண்டும் இணைந்த அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் நெல்லை அண்ணா நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்தனர். இந்த நிலையில் குடும்ப தகராறில் மனைவியை கணவனே நடுரோட்டில் கத்தியால் குத்தியும், உயிரோடு எரித்தும் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story