சமூக பாதுகாப்பு திட்டப்பிரிவு அலுவலகத்தை இடமாற்ற வேண்டும்


சமூக பாதுகாப்பு திட்டப்பிரிவு அலுவலகத்தை இடமாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 25 Sep 2023 6:45 PM GMT (Updated: 25 Sep 2023 6:47 PM GMT)

நாகை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்க்கும் நாட்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சமூக பாதுகாப்பு திட்டப்பிரிவு அலுவலகத்தை இடமாற்ற வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்


நாகை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்க்கும் நாட்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சமூக பாதுகாப்பு திட்டப்பிரிவு அலுவலகத்தை இடமாற்ற வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

நாகை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை பொதுமக்கள் கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறு பொதுமக்கள் கொண்டு வரும் மனுக்களை கலெக்டர் அலுவலக தரைதளத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்டப்பிரிவு அலுவலகத்தில் பதிந்த, உடன் முதல் தளத்தில் நடக்கும் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் அந்த மனுவை கொடுக்க வேண்டும்.

கூட்ட நெரிசல்

இதனால் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் சமூக பாதுகாப்பு திட்ட பிரிவு அலுவலகத்தில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதி காணப்படும். இந்த சமூக பாதுகாப்பு திட்டப்பிரிவு அலுவலகத்தை கடந்து தான் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், முன்னாள் ராணுவ வீரர்கள் அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.

இந்த நிலையில் வாரந்தோறும் நடக்கும் குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த மனுக்களை சமூக பாதுகாப்பு திட்டப்பிரிவு அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக நீண்ட தூரம் காத்திருக்கின்றனர். சில நேரங்களில் அங்கு கூட்ட நெரிசலும் ஏற்படுகிறது. எனவே அந்த அலுவலகத்தை கடந்து மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர்கள் தங்களது துறை அலுவலகத்துக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இடம் மாற்ற வேண்டும்

இதனால் தங்களது குறைகளை நேரடியாக அலுவலகத்திற்கு சென்று தெரிவிக்க முடியவில்லை என வேதனைப்படுகின்றனர். அந்த பகுதியில் போலீசாரை நியமித்தும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு கூட செல்ல முடியவில்லை. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது மக்களின் சிரமத்தை போக்க நாகை கலெக்டர் அலுவலக தரைதளத்தில் இயங்கி வரும் சமூக பாதுகாப்பு திட்டப்பிரிவு அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். அப்போதுதான் அந்த பகுதியில் எளிதாக மாற்றுத்திறனாளிகள் சென்று வருவார்கள். எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story