அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 23 பவுன் நகைகள், ரூ.1½ லட்சம் கொள்ளை


அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 23 பவுன் நகைகள், ரூ.1½ லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 9 Jun 2023 1:43 AM IST (Updated: 9 Jun 2023 1:43 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டையில் ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 23 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் வெள்ளி பொருட்கள், ரூ.1½ லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டையில் ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 23 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் வெள்ளி பொருட்கள், ரூ.1½ லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஓய்வு பெற்ற அதிகாரி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகரில் உள்ள நரியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி(வயது 70). இவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் என்ஜீனியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இவர்களது மகன்கள் இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை ராமசாமியும், அவரது மனைவியும் பக்கத்து ஊரில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டு நேற்று காலை வீட்டிற்கு திரும்பி வந்தனர்.

23 பவுன் நகைகள், ரூ.1½ லட்சம் கொள்ளை

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த கைச்சங்கிலி, சங்கிலி, மோதிரம், வளையல், நெக்லஸ், காப்பு, டாலர் செயின் உள்பட 23 பவுன் நகைகளும், ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1½ லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

ராமசாமியும், அவரது மனைவியும் வெளியூர் சென்றதை தெரிந்து கொண்ட மர்ம மனிதர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று நகைகள், வெள்ளி ெபாருட்கள், ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

வலைவீச்சு

இது குறித்து பட்டுக்கோட்டை நகர போலீசில் ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தஞ்சையில் இருந்து வந்த தடயவியல் நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகள், வெள்ளி பொருட்கள், பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story