பழைய கட்டிடத்தை ஆராய்ச்சி மையமாக மாற்ற வேண்டும்
வால்பாறை அரசு கல்லூரியின் பழைய கட்டிடத்தை ஆராய்ச்சி மையமாக மாற்ற வேண்டும் என்று மாணவ-மாணவிகள் வலியுறுத்தி உள்ளனர்.
வால்பாறை
வால்பாறை அரசு கல்லூரியின் பழைய கட்டிடத்தை ஆராய்ச்சி மையமாக மாற்ற வேண்டும் என்று மாணவ-மாணவிகள் வலியுறுத்தி உள்ளனர்.
அரசு கல்லூரி
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியாக சிங்கோனா எஸ்டேட் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட வகுப்பறைகளுடன் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந் தேதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக மாற்றப்பட்டு, வால்பாறை நகரில் கட்டிய புதிய கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. எனினும் பழைய கட்டிடத்தில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.
இதற்கிடையில் அங்கு சென்று வருவதில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு நடைமுறை சிக்கல்கள் இருந்தது. இதனால் வால்பாறை நகரில் உள்ள கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆராய்ச்சி மையம்
இதையடுத்து அங்கு ரூ.4 கோடியே 60 லட்சம் மதிப்பில் 11 வகுப்பறைகள், நூலகம், ஆய்வகம் மற்றும் சிறிய கலையரங்கத்துடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதை நேற்று முன்தினம் கோவையில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு நேற்று முதல் வகுப்புகள் தொடங்கியது.
இதன் காரணமாக சிங்கோனா எஸ்டேட் பகுதியில் உள்ள கட்டிடம் பயன்படாமல் இருந்து வருகிறது. அனைத்து வசதிகளுடன் அமைதியான சூழலில் இருக்கும் அந்த கட்டிடத்தை பல்வேறு ஆராய்ச்சி படிப்பிற்கான மையமாக மாற்றுவதற்கு உயர் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்ைக எழுந்து உள்ளது.
நடவடிக்கை
இதுகுறித்து மாணவ-மாணவிகள் கூறியதாவது:-
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான சிங்கோனா எஸ்டேட் பகுதியில் உள்ள கட்டிடத்தை ஆராய்ச்சி மையமாக மாற்ற வேண்டும். இதன் மூலம் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆராய்ச்சி படிப்பிற்காக மாணவ-மாணவிகள் வந்து செல்வார்கள். மேலும் அவர்களுக்கு தங்கும் விடுதி இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து வந்து படிக்கும் மாணவ-மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே அங்கு தங்கும் விடுதி கட்டி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.