மதுபான கூடமாக மாறிய பழைய மீன்மார்க்கெட்


மதுபான கூடமாக மாறிய பழைய மீன்மார்க்கெட்
x

மதுபான கூடமாக மாறிய பழைய மீன்மார்க்கெட்

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:

கும்பகோணம் பழைய மீன்மார்க்கெட் மதுபான கூடமாக மாறி செயல்பட்டு வருகிறது. இதை இடித்துவிட்டு புதிதாக வணிக வளாகம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பழைய மீன்மார்க்கெட்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் புதிய பஸ்நிலையம் அருகே பிடாரிகுளம் எதிரே பழைய மீன் மார்க்கெட் உள்ளது. புதிய பஸ் நிலையம் செல்லும் சாலை, கும்பகோணம் 60 அடி சாலை, தஞ்சை மெயின் சாலை ஆகிய 3 சாலைகளின் சந்திப்பு பகுதியில் இந்த மீன் மார்க்கெட் அமைந்துள்ளது.

இதனால் இந்த பகுதியில் எப்போதும் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்த பழைய மீன்மார்க்கெட்டில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வந்தன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழைய மீன் மார்க்கெட் உள்ள இடத்தில் வணிக வளாகம் கட்ட உள்ளதாக கூறி, மீன்கடைகளை எல்லாம் மாநகராட்சி அதிகாரிகள் காலி செய்தனர்.

மதுபான கூடமாக...

தற்போது கொட்டகையில் தற்காலிக மீன்மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. ஆனால் வணிக வளாகம் கட்டுவதாக கூறி காலி செய்யப்பட்ட பழைய மீன்மார்க்கெட் எந்த பயன்பாடும் இல்லாமல் அப்படியே காலியாக கிடக்கிறது. இதனால் கட்டிடங்கள் மிகவும் சிதிலம் அடைந்து காணப்படுகிறது. மேலும் மதுபான கூடமாக மாறி செயல்பட்டு வருகிறது.

இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சிலர், மதுப்பாட்டில்களை வாங்கி வந்து பழைய மீன்மார்க்கெட்டில் அமர்ந்து அருந்துகின்றனர். மேலும் பழைய மீன்மார்க்கெட்டின் இருவாயில்களும் எப்போதும் திறந்து கிடப்பதால் மர்ம நபர்கள் எளிதாக மீன்மார்க்கெட்டிற்குள் செல்ல முடிகிறது. இரவு நேரங்களில் சில சமூக விரோத செயல்களும் நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி இந்த கட்டிடத்தில் உள்ள இரும்பு கம்பிகளையும் மர்ம நபர்கள் திருடி செல்கின்றனர்.

வணிக வளாகமாக மாற்றப்படுமா?

கும்பகோணம் மாநகரின் மையப்பகுதியில் தான் பழைய மீன்மார்க்கெட் உள்ளது. இந்த இடத்தில் வணிக வளாகம் ஏதாவது கட்டி வாடகைக்கு விட்டால் மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை ஏதாவது வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அல்லது இந்த கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கி விட்டு வணிக வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.


Next Story