மூதாட்டியை நூதன முறையில் ஏமாற்றி 30 பவுன் நகைகள் கொள்ளை


மூதாட்டியை நூதன முறையில் ஏமாற்றி 30 பவுன் நகைகள் கொள்ளை
x

மூதாட்டியை நூதன முறையில் ஏமாற்றி 30 பவுன் நகைகளை பெண் கொள்ளையடித்து சென்றார்.

திருச்சி

துறையூர்:

ஓய்வுபெற்ற ஆசிரியரின் மனைவி

திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள பாலகாட்டு மாரியம்மன் கோவில் அருகில் வசித்து வந்தவர் சந்திரசேகரன். தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி விஜயகுமாரி(வயது 80). இவர்களுக்கு ராணி(60) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மகன் சேலத்தில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். ராணி தனது தாயாருடன் வசித்து வருகிறார். சந்திரசேகரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார்.

இந்நிலையில் நேற்று மாலை விஜயகுமாரி வீட்டில் இருந்தபோது சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அங்கு வந்து, 'என்னை அடையாளம் தெரியவில்லையா' என்று விஜயகுமாரியிடம் பேச்சு கொடுத்துள்ளார். அதற்கு அவர் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

மசாஜ் செய்தால்...

அப்போது அந்த பெண், 'பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் உங்களுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை' என்று கூறி, உங்களின் கால் ஏன் வீங்கி உள்ளது. இதற்கு எண்ணெய் வைத்துத் தேய்த்து மசாஜ் செய்தால் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார்.

மேலும் வீட்டில் இருந்த ராணியிடம் எண்ணெய் வாங்கி வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து ராணி கடைக்கு நல்லெண்ணெய் வாங்க சென்றுள்ளார். அப்போது விஜயகுமாரிக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது.

30 பவுன் நகைகள் கொள்ளை

இதனால் செல்போனில் பேசுவதற்காக விஜயகுமாரி வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்றபோது, அவரை அந்த பெண் திடீரென அறைக்குள் தள்ளி தாழிட்டுள்ளார். பின்னர் வீட்டில் உள்ள அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு அந்த பெண் தப்பி சென்றார்.

இந்நிலையில் வீட்டிற்கு வந்த ராணி, விஜயகுமாரி அறைக்குள் வைத்து பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து கதவை திறந்து விஜயகுமாரியை வெளியே அழைத்து வந்தார். இந்த சம்பவம் குறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற பெண்ணை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே பாணியில் சில மாதங்களுக்கு முன் பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை மர்ம நபர் திருடிச்சென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story